சில்லறை வர்த்தகத்தில் ஏற்கனவே கொடிகட்டி பறந்து வரும் அமேசான் இந்தியா, தற்போது புக்மைஷோவுடன் கைகோர்த்துள்ளது. அமேசான் தளத்தில் பட டிக்கெட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் பல சிறு நிறுவனங்களையும் முடக்கி, கொடிகட்டி பறந்து வரும் இந்த நிறுவனம், சிறிது சிறிதாக மற்ற துறைகளிலும் இந்தியாவில் நிலையாக காலூன்றி வருகிறது.
அந்த வகையில் அமேசான் ஏற்கனவே விமான டிக்கெட்களையும் பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது படம் டிக்கெட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த வகையில் அமேசான் வாடிக்கையாளர்கள் இனி தங்களது மொபைல் ஆப்களிலேயே அல்லது இணைய தளங்களிலே பட டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த பிரத்யேக ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது அமேசான் ஆப் அல்லது அமேசான் இன் (Amazon app or Amazon.in) தளத்தில் மூவி டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அமேசான் பே மூலமும் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என்றும், இந்த ஈ- காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டணியின் படி, அமேசான் தனது தளத்தில் தியேட்டர்களை பட்டியலிடும் என்றும், இதனை புக்மைஷோ இயக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இரு நிறுவனங்களுமே வெளியிடவில்லை என்றும், அமேசானின் இந்த பரவலான அணுகல் காரணமாக புதிய பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் இந்தியாவில் அதன் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு டிக்கெட் வாங்கும்போது 2 சதவிகித கேஸ்பேக் சலுகையை அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இது தவிர பயனர்களுக்கு நவம்பர் 14 வரை, ஒவ்வொரு டிக்கெட் வாங்குபவர்களுக்கு 200 ரூபாய் வரை கேஸ்பேக் சலுகை வழங்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. நிலவி வரும் பலத்த போட்டியினால் இந்த நிறுவனம் தனது வர்த்தகத்தினை மேம்படுத்த, பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் இந்த நிறுவனத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நஷ்டத்தில் உள்ள நிறுவனங்கள் நஷ்டத்தினை மேம்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.