தஞ்சாவூர்:
காலி பெருங்காய டப்பா... நம்ம ஊருல திட்டறதுக்கு இதை உபயோகப்படுத்துவாங்க... இதுக்கு என்ன அர்த்தம் தெரியுங்களா? நல்லா வாழ்ந்தவங்க அனைத்தையும் இழந்த பின்னரும் அதே கெத்தோட திரிவாங்க. அதற்காகத்தான் இந்த டயலாக்.
ஆனால் உண்மையிலேயே காலி பெருங்காய டப்பா எப்படி இருக்குங்க... உண்மையில் பெருங்காயத்தை ஒரு டப்பாவில் வைத்து பின்னர் எடுத்து விட்டு அந்த டப்பாவில் பெருங்காயத்தின் வாசனை நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் அந்த டயலாக் வந்தது. அதெல்லாம் சரிதான்... இந்த பெருங்காயம் எங்கிருந்து நமக்கு வந்தது. தெரியுங்களா?
இது ஒரு சின்ன மரத்தின் பிசின்தான். இந்த பெருங்காயம்தான் இந்தியர்களை வளைத்து போட்டுள்ளது. காரணம் இது செரிமானத்திற்கு மட்டுமின்றி வாசனை ஊரையே கூட்டும். அதெல்லாம் சரிதான். இது எங்கு விளைகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தினம் தினம் கேட்கும் ஆப்கானிஸ்தான் தான் இந்த பெருங்காயத்தின் பிறப்பிடம் ஆகும்.
எப்பூடி... இப்பூடிதான்... ஆப்கானிஸ்தானில் அதிகம் விளைகிறது ஒரு குறுமரம்தான் இந்த மரம்தான் பெருங்காயத்தின் தாய். எப்படி தெரியுங்களா? இந்த பெருங்காயத்தின் பயன் அங்குள்ள நாடோடிகளுக்கு தெரியவே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த மரங்களின் வேர், கிளைகளில் மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள் உரசி சேதப்படுத்த அதிலிருந்து கசியும் பிசின்தான் பெருங்காயம் ஆகிறது. ஆனால் இந்த உண்மை ஆடு மேய்ப்பவர்களுக்கு தெரியாது. காரணம் பெருங்காயத்தை அவர்கள் பெரும் காயமாக பார்த்தனர். எப்படி தெரியுங்களா? முதல்நாள் ஆடுகளால் காயம்பட்ட மரத்திலிருந்து வழியும் பிசின் மறுநாள் காய்ந்து ஒரு காளான் குடை போல் காணப்படும்.
இதை பார்க்கும் அவர்கள் இதை பேய் வந்து சாணமிட்டதாக டெவில்ஸ் டங் என்று பெயரிட்டார்கள். காலப்போக்கில் இந்த பயம் மறைந்து அந்த பிசினை எடுத்து முகர்ந்து பார்க்க அப்போதுதான் பெருங்காயத்தின் அருமை அவர்களுக்கு தெரிய வந்தது. பின்னர் பெருங்காயம் உணவில் இடம் பெற்றது. இதை உணவுக்கு கொண்டு வந்தவர்கள் பாரசீகர்களே... அவர்கள் மூலம் படிப்படியாக இந்த பெருங்காயம் உலக மக்களிடம் புழக்கத்திற்கு வந்தது. அதாவது மரத்தில் ஏற்படும் பெரிய காயத்திலிருந்து கிடைப்பதால் இதை பெருங்காயம் என்று அழைக்கின்றனர் என்றும் கூறுவர்.
4 ஆண்டுகள் முதிர்ந்த இந்த மரங்களின் வேர்க்கிளைகளிலிருந்து ஒரு சீசனில் எவ்வளவு பெருங்காயம் கிடைக்கும் தெரியுங்களா? அதிகம் இல்லீங்க ஒரு கிலோ மட்டுமே கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பூக்கும் பருவத்திற்கு முன்பாக இந்த பிசினை அதாவது பெருங்காயத்தை எடுத்தாக வேண்டும். இந்த பெருங்காயம் வாசனைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. செரிமானத்தையும் கொடுக்கிறது என்பதால் இந்தியர்களின் மிகவும் பிரியமான உணவில் இதுவும் இன்றுவரை இடம் பிடித்து வருகிறது. சாம்பார், ரசம், மோர் என்று இடம் பிடித்து தனக்கென்று ஒரு இடம் பிடித்து உள்ளது.
உலகிலேயே அதிகம் பெருங்காயத்தை சாப்பிடுவது இந்தியர்கள்தான். இப்படித்தான் இந்த பெருங்காயம் உணவில் புகுந்து மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது.