டாக்கா:
வயது என்னவோ 4-தான்... ஆனால் பார்வைக்கு தாத்தாவை போல் காட்சியளிக்கும் சிறுவனின் தோற்றத்தை மாற்ற டாக்டர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.


வங்காளதேசத்தில் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் தாத்தாவைப் போல் காட்சியளிக்கும் 4 வயது சிறுவன் டாக்டரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறான். 


வங்காளதேசத்தை சேர்ந்த லாப்லு லட்கர் - காத்தூன் தம்பதியரின் மகன் பைசித் ஷிக்தர். பிறக்கும் போதே வித்தியாசமாக இருந்துள்ளான்.


ஆனால் வளர வளர வயோதிக தோற்றத்துடன் குழந்தை காணப்பட்டதால் அவனது பெற்றோர் வேதனையில் வாடினர். இதற்கு காரணம் ‘புரோகேரியா’ எனப்படும் விசித்திர நோய் என்பது தெரியவந்தது. தங்களின் சொத்துக்களை விற்று மருத்துவம் பார்த்தும் எவ்வித பலனும் இல்லை. இதனால் வேதனையில் துடித்த லாப்லு லட்கர் தம்பதி நிலை குறித்து ஊடகங்களின் வாயிலாக வெளியுலகிற்கு தகவல் தெரிய வந்தது.


மரபு சார்ந்த இந்த நோய் பாதிப்பிற்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பாக ஆய்வு செய்யவும், பைசித் ஷிக்தருக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்கவும் டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்போது முன்வந்துள்ளது.


அபரிமிதமான தோல் வளர்ச்சி மட்டுமின்றி, இதயம், கண், காது, பிறப்புறுப்பு போன்ற பகுதிகளிலும் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக முதல்கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாக இந்த தனியார் மருத்துவமனையின் தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைமை டாக்டரான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வயோதிக தோற்றத்தை மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.



Find out more: