சேலம்:
நன்றிக்கு உதாரணம் நாய்... ஆனால் தன் புத்திக்கூர்மையால் தற்கொலைக்கு முயன்ற முதலாளியை காப்பாற்றிய அவரது செல்ல நாயை அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர் மக்கள். இது நடந்தது எங்கு தெரியுங்களா? 


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி என்ற ஊரில்தான் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைத்தி படையாச்சி தெருவில் வசிப்பர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளி.


இவர்  ‘பிஸி’  என்று பேர் வைத்து ஒரு நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். ரவிச்சந்திரன் எங்கு சென்றாலும் பிஸி அவரோடவே செல்வது வழக்கம். 2 நாட்களுக்கு முன்பு குடும்பச்சண்டையால் ரவிச்சந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.


அவ்வளவுதான் தவித்து போன அவரது செல்ல நாய் மோப்பம் எடுத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளது. ஆனால் தன் முதலாளியை பார்த்த அதற்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. கிடுகிடுவென்று வீட்டுக்கு ஓடிவந்த அந்த நாய் முதலாளியின் மகன் குமாரை (23) கத்தி எழுப்பியுள்ளது. ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.


விடுவேனா என்று மல்லுக்கட்டி அவரோட சட்டையை தன் வாயால் கவ்வி இழுத்து குரைத்துள்ளது. பின்னர் குரைத்துக்கொண்டே ஓட குமார், நாயின் பின்னாலே சென்றுள்ளார். பிஸி நேராக ரவிச்சந்திரன் இருக்கும் இடத்திற்கு செல்ல பின்தொடர்ந்து வந்த குமாருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.


அங்கு அவரது அப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இருப்பதை கண்டு அதிர்ந்து உடன் அவரை அதிலிருந்து மீட்டார். ரவிச்சந்திரனை காப்பாற்றிய "பிஸிக்கு" விருந்து வைத்து உபசரித்துள்ளனர் அக்குடும்பத்தினர். வளர்த்தவரை காப்பாற்றிய நன்றியுள்ள நாயை அதிசயமாக பார்த்து செல்கின்றனர் அந்த பகுதி மக்கள்.


Find out more: