தஞ்சாவூர்:
யாருப்பா... அது படிக்கட்டுல தொங்கிக்கிட்டு இது என்ன உடற்பயிற்சி கூடமா... ஏறி மேல வாப்பா... என்றபடி கூட்டத்தை உள்ளே அனுப்புவதும், டிக்கெட் கிழித்து கொடுப்பதுமாக இருந்தார் அந்த டவுன் பஸ் கண்டக்டர்.
டிக்கெட் கிழிப்பதற்கு முன்பாக பணம் வைக்கும் அந்த பையின் பக்கவாட்டில் எதையோ தொடுவதும்... பின்னர் டிக்கெட்டை கிழிப்பதுமாக அன்னிச்சை செயல் போல் செய்து கொண்டிருந்தார். என்னதான் செய்கிறார் என்று பார்க்க முயன்றோம்... முடியவில்லை. காரணம் பஸ் முழுவதும் மக்கள் நெரிசல்.
அந்த பஸ் தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும டவுன் பஸ். சில ஸ்டாப்பிங்கிற்கு பிறகு பஸ்சில் கும்பல் குறைந்தவுடன் மீண்டும் கண்டக்டரை பார்த்தோம்.
இப்போது தெளிவாக அவர் என்ன செய்தார் என்று தெரிந்து. கண்டக்டர் வைத்திருந்த அந்த பணப்பையின் பக்கவாட்டில் ஒரு சிறிய டப்பா அமர்ந்திருந்தது. ஆர்வம் தாங்க முடியாமல் எழுந்து நேரடியாக அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றவுடன் நமது ஆர்வம் மேலும் அதிகரித்தது காரணம் என்ன தெரியுங்களா?
பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் கொடுப்பதற்குள் கண்டக்டர்கள் படும் பாடு அவர்களுக்குதான் தெரியும். மிஷின் வந்து விட்டாலும் இன்னும் ஏராளமான பஸ்களில் இன்றும் டிக்கெட்தான் கிழித்து கொடுக்கப்படுகிறது.
இந்த டிக்கெட்டுகளை கண்டக்டர்கள் எப்படி கிழிப்பார்கள் என்று பார்த்தால் அந்த டிக்கெட்டை வாங்கவே யோசிப்பார்கள் பயணிகள். வேறு வழி வாங்கித்தானே ஆகவேண்டும். ஆம் கண்டக்டர்கள் டிக்கெட் இரண்டாக வந்துவிடக்கூடாது என்பதற்காக நெற்றி வியர்வையை தொட்டும், நாக்கு எச்சிலை தொட்டும் டிக்கெட் கிழித்து கொடுப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.
அசூசையாக இருந்தாலும் டிக்கெட் அவசியம் என்பதால் பயணிகளும் தலையெழுத்தே என்று அதை வாங்கி கொள்வர். பார்த்தாலும் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொள்வது வாடிக்கையான சம்பவம். இதை அனைத்து பஸ்களிலும் தவறாமல் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் காணக்கிடைக்கும் ஒரு சம்பவம்தான்.
ஆனால் அந்த டவுன் பஸ் கண்டக்டர் செய்தது பெரிய விஷயம். அவரது பணப்பையின் பக்கவாட்டில் இரு பட்டைகளுக்கு இடையில் அடக்கமாக உட்கார்ந்திருந்த அந்த டப்பாவில் ஒரு ஸ்பான்ஜ் இருந்தது.
அதில் தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரமாக இருந்தது. இதை தொட்டுதான் அந்த கண்டக்டர் டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். பணத்தை எண்ணி தருவதற்கும் இதை பயன்படுத்தினார்.
ஆச்சரியம் அல்லவா? உண்மையிலும் இது ஆச்சரியமான விஷயம்தான். மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தோம். இப்படி ஒரு ஐடியா எப்படி உங்களுக்கு வந்தது என்று கேட்டோம்.
அதற்கு அவர் கூறியது பெரிய விஷயம். அந்த கண்டக்டர் பெயர் முருகானந்தம். நானும் ஆரம்பகாலத்தில் மற்ற கண்டக்டர்கள் போல்தான் எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்து கொடுத்து கொண்டிருந்தேன். இதனால் என்ன பாதிப்பு என்பது தெரியாத வரைதான் இப்படி நடந்தது.
ஒருநாள் எங்கள் பகுதியில் நடந்த சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எச்சிலால் ஏற்படும் தொற்று நோய்கள் பற்றிய விளக்கம் என்னை விழிக்க செய்தது. எத்தனை பேருக்கு நாம் எச்சிலை தொட்டு தருகிறோம்.
அதனால் அவர்களுக்கு ஏதேனும் வியாதி வந்திருந்தால் நாம் அல்லவா அதற்கு காரணமா இருந்திருப்போம் என்று உணர்ந்தேன். இதனால் காசு வைக்கும் பையின் பக்கவாட்டில் ஒரு பட்டையை ரெடி செய்து அதில் இதுபோன்ற டப்பாவில் தண்ணீரில் நனைத்த ஸ்பான்ஜ்சை வைத்து டிக்கெட் கிழித்து கொடுக்க ஆரம்பித்தேன்.
இதேபோல் சில கண்டக்டர்களும் தயார் செய்து கொண்டு விட்டனர். இதை அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றார்.
அவரது அந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறைக்கு பாராட்டுக்கள் கூறி புறப்பட்டோம். இதை அரசே செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
பஸ்சில் பயணிக்கும் பயணிகளும் எவ்வித அசூசையும் படாமல் டிக்கெட் பெற வழி வகுக்கும். இதில் பெரிய செலவு ஏதும் வந்துவிடப்போவதில்லை. கண்டக்டர்களே மனசு வைத்தால் இதை செய்து கொள்ளலாம். யோசிப்பார்களா? யோசித்தால் நலம் பயக்கும்...