திருச்சி:
சோழ நாடு சோறுடைத்து... காவிரி பாயும் தமிழகம் தென் நாட்டின் நெற்களஞ்சியம் என்ற புகழ் கொடி பறந்த காலம் மலையேறி போய்விட்டது. அடுத்த உலக போர் என்றால் அது தண்ணீருக்காகவே நடக்கும் என்று நிபுணர்கள் சொல்லியுள்ள அதிர்ச்சி தகவலை தற்போது தமிழகமும், கர்நாடகாவும் நிரூபித்து விடும் போல் உள்ளது.


ஆண்டுதோறும்... தண்ணீருக்காக தமிழகம் தவித்து நிற்பதும்... கர்நாடகா காவிரி எங்களுக்கே சொந்தம் என்பது போல் மல்லுக்கட்டுவதும்... என்று இந்த இரு மாநிலங்களின் மோதல் மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு போய்விடுகிறது. 


முப்போகம் விளைவித்து உலகிற்கே உணவளித்த தமிழக விவசாயிகளின் கண்களில் ஊற்றாய் வழிவது என்ன கண்ணீரா... இல்ல ரத்த கண்ணீர்தான். காரணம்... காவிரி நீர்தான்.


தமிழகத்திற்கு தண்ணீரா... சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம் என்று ஆண்டுக்கு ஆண்டு மல்லுக்கட்டும் கர்நாடகத்தின் செயலே தமிழக விவசாயிகளின் ரத்த கண்ணீருக்கு காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.


தன் வயிற்றுக்கு ஈரத்துணி விழுந்தாலும்... நெல் விளைவிக்காமல் இருந்ததில்லை விவசாயிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.


ஆனால் காவிரி நீர் வந்தால்தானே வயல்களில் நெற் கதிர்கள் தாலாட்டும். ஆனால் கர்நாடகத்தின் இதயம் போல் அல்லவா தமிழக வயல்கள் பாளம், பாளமாக வெடித்து காய்ந்து போய் கிடக்கின்றன.

Displaying Sp 1.jpg

இந்த பிரச்னை இன்று.. நேற்று தொடங்கியது 1932ம் ஆண்டே தமிழகத்தின் தலையெழுத்தை கிருஷ்ணராஜ சாகர் என்ற அணை கட்டப்பட்டபோதே மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அன்று போட்ட பிள்ளையார் சுழி...


இன்றுவரை தமிழகத்தை வதைத்துதான் வருகிறது. 1970க்களுக்கு பிறகு கர்நாடகா தன் மாநிலத்தை வளப்படுத்த புதிய அணைகள் கட்டியது காவிரி நீர் பிரச்னையில் மேலும் நெருப்பை... இல்ல... இல்ல... பெட்ரோலை லிட்டர் லிட்டராக கொட்டியது போல் ஆகி விட்டது.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட இந்த தண்ணீரை முன்வைத்து கர்நாடகாவில் நடந்த வெறியாட்டம் தமிழர்களின் ரத்தத்தை அல்லவா குடித்தது. காவிரி நீரை பெறுவதில் தமிழகத்துக்கு சாதகமாக அனைத்து உரிமைகளும் உள்ளது.


சட்டமும் அதை கண்டிப்பாக சொல்கிறது. நாம் அந்த அரசியல் சூட்சுமத்தில் சிக்கி கொள்ள வேண்டாம். பொதுவாக, நடுநிலையாக இருந்து இந்த விஷயத்தை அணுகுவோம். மனித வாழ்வின் அடிப்படையே தண்ணீர்தான்.


ஏன் நம் உடலிலும் முக்கால் பங்கு நீர்தானே இருக்கிறது. தண்ணீர் இல்லை என்றால் எந்த உயிரும் இல்லை என்பதுதான் நிச்சயமான உண்மை.


ஆனால் இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தண்ணீருக்காக பக்கத்து மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையில்தான் நாம் உள்ளோம்.


தனி நபருக்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் தண்ணீரின் அளவை வைத்தே போதுமான தண்ணீர், தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் பஞ்சம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. 


அதாவது ஒரு நபருக்கு ஓர் ஆண்டில் 17 லட்சம் லிட்டர் (1700 கனஅடி) தண்ணீர் கிடைத்தால்... அது போதுமான தண்ணீர் என்று கணக்கிடப்படுகிறது. இந்த அளவு 10 லட்சத்திற்கு குறைந்தால் தண்ணீர் பற்றாக்குறை... 5 லட்சத்திற்கு குறைந்தால் தண்ணீர் பஞ்சம். இப்படித்தான் வரையறுக்கின்றனர். அப்படி பார்க்கும் போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம்தான் தமிழ்நாடு. 


பற்றாக்குறை ஒரு புறம் இருக்கட்டும். கிடைக்கும் நீரை வீணாக்குவதில் நாம் கில்லாடிகளோ... கில்லாடிகள் என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இந்த மாநிலத்தில் தண்ணீரை எந்தளவிற்கு நேசிக்க வேண்டும். அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்.


ஆனால் அந்த கவனம் நம்மிடம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தில் 1977, 2005, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் மட்டும் நாம் வீணாக்கிய அதாவது கடலில் கலந்த தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுங்களா? 500 முதல் 1000 டிஎம்சி தண்ணீர். 

Displaying Sp 6.JPG

இந்த நீரை வைத்து நாம் எவ்வளவு நெல் சாகுபடி செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். தெரிந்து கொள்ளுங்களேன்...
ரூ.51ஆயிரத்து 950 கோடி நெல்லை நாம் சாகுபடி செய்திருக்க முடியும் என்பதுதான் உண்மையிலும் உண்மை.


இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதற்கு காரணம்... நம் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க தேவையான தடுப்பணைகள் இல்லாததுதான் காரணம். ஆறுகளில் நடுவில் தடுப்பணைகள் கட்டி இருந்தால் நமக்கு இந்த தண்ணீர் மிகுந்த பயனாக இருந்து இருக்கும். 

Displaying Sp 10.jpg

ஆனால் இப்போது பாலைவனமாகவும், கான்கிரீட்டை விளைவிக்கும் நிலமாகவும் அல்லவா விளைநிலங்கள் மாறிவிட்டது.
முதலாளியாக இருந்த விவசாயிகள் இன்று கட்டடம் கட்டும் இடத்தில் தொழிலாளிகளாக இருக்கின்றனர். சரி விஷயத்துக்கு வருவோம். 

Image result for mason tamilnadu

தண்ணீருக்காக மல்லுக்கட்டுவது ஒரு புறம் இருந்தாலும் கிடைக்கும் நீரை வீணாக்காமல் காப்பாற்றி பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது இப்போதே அவசியமான ஒன்று ஆகும். இதில் கர்நாடகா கில்லாடியாக இருக்கிறது.


தங்கள் மாநிலத்தின் பசுமையை, வளமையை மேம்படுத்தி கொள்ள புதிய அணைகளையும், தடுப்பணைகளையும் ஏற்படுத்துகிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் பாலைவனம் போல் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


அரசுதான் செய்ய வேண்டும். அரசேதான் பொறுப்பு என்று பருப்பு கடைந்தால் இனி தமிழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.


அரசு என்பது என்ன? நாம் பார்த்து அமர வைத்தவர்கள்தானே. நம்மை போல்தானே அவர்களும். அவர்களுக்கும் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? நீர்நிலைகளை காப்பாற்றுவதில் மக்களாகிய நாமும் முக்கிய பங்காற்ற வேண்டும். 


தமிழகத்தில் உள்ள 39ஆயிரத்து சொச்சம் நீர்நிலைகளில் (கண்மாய் உட்பட) 10 சதவீதம் மாயமாய் மறைந்து போய்விட்டது. நாமே அதை அழித்து விட்டோம் என்பதும் உண்மை.


மக்களாகிய நாம் செய்த ஆக்கிரமிப்பால்தான் இவை காணாமல் போய்விட்டது. நீர் நிலைகளை சரியான முறையில் பராமரித்து பாதுகாப்பாக வைத்திருந்தால் கொட்டும் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் முப்போகம் இல்ல... எந்த காலமும் போகம்தான்... (விளைச்சல்) என்ற நிலைக்கு தமிழ்நாடு இருந்திருக்கும்.


ஆனால் நம் அலட்சியம் இப்போது தண்ணீருக்காக கண்ணீர் விட வைத்துள்ளது. நீர் நிலைகளை பராமரிப்பதிலும், மழை நீரை சேமிப்பதிலும் தனிநபர்கள், அரசு, சமூகம் என அனைவருக்கும் பங்கு உள்ளது. ஒன்று கூடினால் உண்டு வாழ்வு என்று நம் முன்னோர்கள் சொல்லியதை மறந்தே அல்லவா போய்விட்டோம். இதை இப்போது நமக்காக செய்கிறோம் என்று எண்ணாமல் எதிர்கால சந்ததிகளுக்காக நாம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். 

Displaying Sp 9.jpg

நீர் நிலைகளை பக்காவாக பராமரித்தால் காவிரி நீருக்கு இணையாக கண்மாய்களும், ஏரிகளும், கால்வாய் தண்ணீரும் நம் கண்ணீரை துடைக்கும். இருப்பினும் காவிரி நீரில் நமக்குள்ள உரிமையை எக்காலத்திலும் விட்டும் கொடுக்க முடியாது. நீர்நிலைகளை பராமரிக்க தவறினால்... நம் கதி அதோகதிதான். 

Displaying Sp 8.jpg

இன்றுள்ள அரசியல்வாதிகள் நாளை இருப்பதில்லை. ஆனால் நீர்நிலைகள் என்றும்... என்றென்றும் மக்களுடன் வாழ்பவை. அவற்றை பராமரிப்போம்... கண்ணீரின்றி... தண்ணீருக்காக தவிப்பதை தவிர்ப்போம்...


Find out more: