சென்னை:
பலமுகம் கொண்ட திறமைச்சாலியை இன்று திரையுலகம் இழந்து தவிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பாடலாசிரியர், பிரபல தயாரிப்பாளர், கதை, வசனகர்த்தா, இயக்குனர் என்று பன்முகம் காட்டி கோலிவுட்டில் தனி சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்த ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலம் (76) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் சிந்தி வருகிறது. 


காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமம் தான் பஞ்சு அருணாச்சலம் பிறந்த ஊர். கடந்த 1941-ல் இங்கு பிறந்த பஞ்சு அருணாச்சலத்தின் சொந்த சித்தப்பா யார் தெரியுங்களா? கவியரசு கண்ணதாசன்தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும் போது... சித்தப்பாவின் கவித்திறமை அண்ணன் மகனுக்கும் வராதா? வந்ததே...!


1960களிலேயே தன் திரையுலகப் பயணத்திற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் பஞ்சு அருணாச்சலம். தன் சித்தப்பா கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக திரையுலகில் தடம் பதித்தவர் பின்னர் பெற்ற வெற்றிகள்... இமயமலை போல் உயர்வானவை. 


அந்த காலக்கட்டத்தில் சினித்துறையையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இருபெரும் ஜாம்பவான்கள் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் பணியாற்ற ஆரம்பித்தார் பஞ்சு அருணாச்சலம். இதில் எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் என்னை மறந்ததேன்..., பொன்னெழில் பூத்தது.... ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள்தான் இவரை மிகவும் உச்சத்திற்கு கொண்டு சென்றவை. இவர் பேனாவில் மை ஊற்றி எழுதுகிறாரா... இல்ல வசியம் வைத்து எழுதுகிறாரா என்று தெரியாத அளவிற்கு இவரது பாடல்கள் ரசிகர்களை மையம் கொண்டவை என்றால் மிகையில்லை.


இப்படி திரையுலகில் பாடலாசிரியராக கால் பதித்து தொடர்ந்து பல படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் இன்றும் வைரம் போல் ஜொலிக்கின்றன. பாடலாசிரியராக மட்டும் நின்று விடாமல் அடுத்த தளத்திற்கு தன்னை முன்னேற்றிக் கொண்டார் பஞ்சு அருணாச்சலம். ஆமாம்... எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படத்தின் வாயிலாக 1974-ம் ஆண்டு திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக உருமாற்றம் அடைந்தார். பாடல் எழுதியவர் எப்படி திரைக்கதை எழுத முடியும் என்ற அவநம்பிக்கை பார்வை பார்த்தவர்கள் வெட்கி தலைக்குனியும் படி மயங்குகிறாள் ஒரு மாது, துணிவே துணை, அவன்தான் மனிதன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.


இதன்பின்னர்தான் அவரது பரிணாமம் மாற்றம் அடைந்தது... பாடலாசிரியர், திரைக்கதை, வசனகர்த்தா என்று இருந்த பஞ்சு அருணாச்சலம் 1976-ல் அன்னக்கிளி என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் தயாரிப்பாளர் ஆனார். இந்த படம்தான் இசைஞானியை நமக்கு கொடுத்தது. பாடல்கள், இசை, கதை என்று டாப் டூ பாட்டம் செம ஹிட் அடித்த இந்த படம் இளையராஜாவையும் பெரிய அளவில் ரசிகர்கள் விரும்ப காரணமாக அமைந்தது. 


பிறகென்ன... வெற்றிக்கரமான தயாரிப்பாளர் என்ற பெயரை 
கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா என்று ரஜினிகாந்த்தை வைத்து இவர் தயாரித்த படங்கள் அவரை சூப்பர் நடிகராகவும் உயர்த்தியது. ரஜினியை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினாலும் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் என்ற பெருமை பஞ்சு அருணாச்சலத்திற்கே சொந்தமாகும்.


ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் ரஜினியை பல்வேறு பரிமாணங்களில் காட்டியவர் பஞ்சு அருணாச்சலம்தான். ஒரு படத்தின் திரைக்கதை, பாடல்கள், வசனம், தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக இருக்கும் இவரது படங்கள். அதுமட்டுமா... எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பெரியஜாம்பவான்கள் போலவே கோலிவுட்டில் ரஜினி, கமல் வளர்ந்த நேரத்தில் அவர்களை வைத்து ஒரே நேரத்தில் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன் என இரு வேறுபட்ட படங்களை எடுத்தவர் இவர்தான். இந்த இரண்டு படங்களும் இரண்டு தளங்கள். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.


அத்தோடு மட்டுமா? எனக்கு இயக்கவும் தெரியுமாக்கும் என்று 1977-ல் என்ன தவம் செய்தேன் என்ற படம் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார் பஞ்சு அருணாச்சலம். சொன்னதைச் செய்வேன், நாடகமே உலகம், மணமகளே வா, புதுப்பாட்டு, கலிகாலம், தம்பி பொண்டாட்டி போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் உருவானவைதான்.


ஒரு பெரிய வரலாற்று சாதனையை தன்னிடம் வைத்திருந்தார் பஞ்சு அருணாச்சலம் என்றே கூறலாம். இவரது கதை, வசனத்தில் உருவான படங்கள் மட்டும் 179 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் பெரும்பாலும் வெற்றிப் படங்களே. குறிப்பாக ஏ.வி.எம் நிறுவனத்தில் எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா கூட்டணியில் உருவான படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அவை அனைத்தும் வெள்ளிவிழாவை கொண்டாடியவை என்று. அந்தளவிற்கு இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்தது. கமர்ஷியல், மசாலா, குடும்பக்கதைகள் என்று எந்த ஜானரையும் விட்டு வைக்கவில்லை. தற்போது டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படும் படங்களுக்கு முன்னோடி இந்த கூட்டணியில் வெளி வந்த படங்கள் என்றால் அது உண்மையிலும் உண்மைதான்.


பன்முகம் காட்டினாலும் பாடலாசிரியராக பஞ்சு அருணாச்சலம் செய்த சாதனையை கோலிவுட் என்றுமே மறக்காது. அவர் இளையராஜா இசையில் எழுதிய அத்தனை பாட்டுகளும் கிடைப்பதற்கரிய முத்து போன்றவை. இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய பஞ்சு அருணாச்சலம் வயோதிகம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்து வந்தார். இதனால் எழுதுவதையும் அவர் குறைத்து கொண்டார். 


சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் உடல்நிலை சற்றே முன்னேற்றம் அடைய வந்துட்டேன் நான் என்பது போல் மீண்டும் எழுத ஆரம்பித்தார். இளையராஜா இசையில் பாடல்களும், ஒரு படத்துக்கு கதை வசனமும் எழுத ஆரம்பித்த நேரத்தில் மீண்டும் உடல்நிலை சரியின்றி தெய்வத்தின் பாதங்களை சென்றடைந்துள்ளார். 


காலமான பஞ்சு அருணாச்சலத்துக்கு அரு.சண்முகம், சுப்பு பஞ்சு ஆகிய மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். சண்முகம் மற்றும் கீதா இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அவர்கள் சென்னை வந்த பிறகே பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.


Find out more: