களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா அதற்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட, அவ்வப்போது ,புலிவால், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்து வந்தார். சென்ற ஆண்டு விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் ரியாலிட்டி கேம் ஷோவில் கலந்து கொண்ட ஓவியா, சினிமாவில் பெற்ற புகழை காட்டிலும் அந்நிகழ்ச்சியில் செய்த குறும்பு சேட்டைகள் மூலமாக பெற்றார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வரவேற்பையும், ரசிகர் கூட்டத்தின் ஆரவாரத்தையும் தொடர்ந்து, சில படங்களில் கமிட் ஆனார் ஓவியா. அதில் ஒன்று தான், டீகே இயக்கத்தில் வைபவ் நடிக்கும் காட்டேரி. டீகே, முன்னரே ஓவியாவை யாமிருக்க பயமே படத்தில் இயக்கியது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டே தொடங்கப்பட்ட இத்திரைப்படம் பல மாதங்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்த நிலையில் ஓவியா திடீரென இத்திரைப்படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியுடன் மீசையை முறுக்கு படத்தில் நடித்த ஆத்மிகா, வைபவிற்கு ஜோடியாகவுள்ளார். இப்படத்தில் ஆத்மிகா தவிர, கப்பல் புகழ் சோனம் பஜவா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா, இப்பொழுது முனி 4 காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சுடன் நடித்து வருகிறார்.