இரண்டு மூன்று மாதங்கள் முன்பு வரை கீர்த்தி சுரேஷ் என்றாலே, அனைவரும் கலாய்ப்பதற்கென்றே அளவெடுத்து செய்தது போல, நெட்டிசன்கள் பலரும் வகை தொகையின்றி மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ் போட்டு வந்தனர். ஆரம்பத்தில் இது என்ன மாயம், ரஜினிமுருகன் என ஸ்டெடியாக வளர்ந்து வந்த கீர்த்தியின் இமேஜ், தொடரி என்ற ஒரே ஒரு படத்தால் சுக்கு நூறாக உடைந்தது.

அப்படத்தில் இவர் செய்த அஷ்டகோணல் முகபாவங்களும், எக்ஸ்பிரேஷன்களும், இவரை மீம் க்ரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாக ஆக்கியது. இதை தொடர்ந்து கீர்த்தி எந்த படம் நடித்தாலும், ஏன், போட்டோஷூட் செய்தாலும் கூட கலாய்த்து தள்ளி வந்தனர். இந்நிலையில் தெலுங்கிலும் அஃஞ்ஞாதவாசி படத்தால் பலத்த அடி வாங்கியிருந்த கீர்த்தி, கடைசியாக நம்பியிருந்தது மஹாநடி / நடிகையர் திலகம் படத்தை தான்.

ஆயினும் அனைவரும், அப்பேற்பட்ட நடிகையான சாவித்ரியாக கீர்த்தி எப்படி பொருந்துவார் என்று கேட்டு வந்த நிலையில், இன்று படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவரும் பாராட்டுவது கீர்த்தியின் நடிப்பை தான். தனது வாழ்நாளின் சிறந்த நடிப்பை இப்படத்தில் அவர் வழங்கியுள்ளதாகவும், மஹாநடி சாவித்ரியை அப்படியே கண்முன் நிறுத்திய இந்த ஜெனரேஷன் மஹாநடி கீர்த்தி என்றும், அனைவரும் பாராட்டி தள்ளி வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமவுலியே கீர்த்தியின் நடிப்பை கண்டு வியந்து பாராட்டியுள்ள நிலையில், கீர்த்தி ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் உள்ளார்.