‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.
இப்படத்தில் மு ராமசாமி, நாக் விஷால், யோக் ஜபி ஆகியோருடன் இணைந்து பலர் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க, கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கிறார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.
லண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருங்கே வென்றிருக்கிறது.
யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு ராமாசாமி, நாக் விஷால், யோக் ஜபி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கே டி’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதத்தில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.