Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம்
சாக்ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ்,
விமலா ராமன், சாய் தன்ஷிகா,
யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கூறியதாவது
“இருட்டு” இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான் . வெளிச்சம் வந்து விட்டு போகிறது அவ்வளவு தான். இந்தப்பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள். எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில் அதை உண்மையாக சொல்கிறேன். ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதை துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி.
இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றிபெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப்படத்தில் இருக்க கூடாது என உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார். சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர் காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளிவருகிறது. “இருட்டு” எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும், என்றார்.