ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

 

இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும்போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக்கும் நன்றி’ என்றார்

 

அமீர் பேசியதாவது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..

 

 

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன். தமிழ்சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.

 

கலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம்சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.

 

அதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப்பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்.

 

இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது" என்றார்.

Find out more: