தானாக உருவான சுயம்பு போல் தேசியவிருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக்கேட்க வைத்த தமிழ் திரைப்படம் “பாரம்”. ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப்பெற்ற இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனம் பெயரில் SP Cinemas மூலம் வெளியிடுகிறார். படவெளியீட்டை ஒட்டி இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய
SP Cinemas நிறுவனர் கிஷோர் பேசியதாவது...
எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும். நன்றி
தயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசியதாவது...
நான் ஒரு மும்பை பெண். இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய இருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணஸ்வாமி
நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.