நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய்நிலம்’. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாச பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்தப் படத்திற்கு முதலில் ‘பயணங்கள் தொடர்கிறது’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.. ஆனால் தற்போது கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால் ‘தாய் நிலம்’ என மாற்றப்பட்டு உள்ளது. இதுபற்றி படத்தின் இயக்குநர் அபிலாஷ் கூறும்போது,
“உலகம் முழுதும் பறந்து விரிந்த இனம் தமிழ் இனம்.. பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதரர்கள் தங்களது இடத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறும் சூழல் உருவானபின் அவர்களை அரவணைக்கும் இடமாக இருப்பது நம் தாய் நிலம் தான்..
அப்படி வருபவர்களை இங்குள்ள மக்களும் அதிகார வர்க்கமும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக இது உருவாகி இருப்பதால் இதற்கு ’தாய் நிலம்’ என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என தற்போது தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டு செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட, தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.
அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இருவரும். இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது....
குறிப்பாக பெரும் போராட்டத்திற்கு இடையில் கடலைத் தாண்டி வரும் இவர்களுக்கு இந்த நிலம் எந்த மாதிரியான அனுபவங்களையும் படிப்பினையையும் கொடுக்கிறது என்று சொல்லும் விதமாக கடலுக்கும் அந்த மனிதனுக்கும் ஒரு குழந்தைக்குமான போராட்டமாகத்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.. அவர்களின் இந்த வலியைப் புரிந்துகொண்ட எல்லோருக்கும் அவர்கள் மீதான மரியாதையை இந்தப் படம் ஏற்படுத்தும்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.
கேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்.. 2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில் நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.
அவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்.. இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும் கூட வியாபார காரணங்களால் படத்தை தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.
அப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இப் படத்தை தானே தயாரிக்கவும் முன்வந்தார்..
’தாய் நிலம்’ படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் தவிர சமீபத்தில் மறைந்த நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.. மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
மிகுந்த சிரமங்களுக்கிடையே தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் தென்காசி, கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.
படத்தின் இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி எழுதியுள்ளனர். இது தவிர, கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும் படத்தில் சூழலுக்கு தகுந்தவாறு இணைத்துள்ளனர்.
மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்... விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது போஸ்ட் பபுரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் அமர் ராமச்சந்திரனும்.