எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 'டிம் டிப்'. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் . எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி.
'டிம் டிப் 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, "இங்கே .இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் இயக்குநர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேசினார்கள். இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சி .ஆனால் சற்று இடைவெளி இருந்தது போல் தெரிந்தது. அவர்களுக்குள் ஹெமிஸ்ட்ரி இல்லையோ என்று தோன்றியது. அப்படிப்பட்ட காட்சிகளில் இருவரும் சங்கோஜப்பட்டு நடித்திருந்தார்கள்.இருவரும் ஒரு போர்வைக்குள் போர்த்திக் கொள்வது போல் முடிகிற அந்தக் காட்சிக்கு முன்பு இருந்த இடைவெளியில் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். இருவரும் சங்கோஜப் பட்டுக் கொண்டிருந்தார்கள் .
நான் கூட 'மௌனகீதங்கள்' படத்தில் நடிக்கும்போது சரிதாவை வாங்க போங்க என்று தான் அழைப்பேன். அவருக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது .பெயர் சொல்லி அழையுங்கள் என்பார். நடிக்கும்போதெல்லாம் நன்றாக நடித்து விடுவோம் . பேசும்போது பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வார்த்தை வரவில்லை. காரணம் அவர் 'தப்புத்தாளங்கள்' போன்ற படங்களில் நடித்து மூத்தவர் என்கிற உணர்வு மனதில் இருந்ததால் கடைசி வரை பெயர் சொல்ல வாய் வார்த்தை வரவே இல்லை.
நமக்கு நெருக்கமான நண்பன், வாடா போடா என்று கூப்பிட்ட அந்த நண்பனுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவனது மனைவியை வாங்க போங்க என்றுதான் அழைப்போம் .அப்போது அவன் நீ அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம் என்பான். ஆனால் நமக்கு வாய்வராது .அதுதான் நமது பண்பாடு .ஏனென்றால் நண்பன் நமக்குத் தெரிந்தவன். அந்தப் பெண் யார் வீட்டுப் பெண்ணோ ? எனவே நமக்கு அப்படிச் சொல்லத் தோன்றாது. பெயர் சொல்லி அழைக்க நமக்குள் இடர்பாடு இருக்கும்.அந்த இடர்ப்பாடு மரியாதைக்குரிய இடர்ப்பாடுதான்.ஏனென்றால் அதுதான் நமது பண்பாடு.