வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்க சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படம் தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு திரையுலகமே ஆச்சயப்படும் வேகத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில், ஆக்ரோஷமான சண்டைக்காட்சியை எடுத்து முடித்துள்ளது படக்குழு. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளை துவக்கவுள்ளது “சினம்” படக்குழு.
இது குறித்து இயக்குநர் GNR குமரவேலன் கூறியதாவது...
நடிகர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்து வெளியீடான “மாஃபியா” படத்தின் வெளியீட்டு பணிகளுக்கும் அவர் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால் இத்தனை இடையராத பணிகளுக்கு மத்தியிலும் இப்படத்திற்கு நேரம் ஒதுக்கி, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க பெரும் ஆதரவாக இருந்தார். எங்கள் அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது என்னவெனில் இத்தனை படங்களில் நடித்தாலும் அவர் தனது கதாப்பாத்திரத்திற்கு தரும் உழைப்பு, அர்ப்பணிப்பு பிரமிப்பை தந்தது. ஒரு ஆக்ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிரும்போது அவருக்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால் கொஞ்சம் கூட அதனை பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்த காட்சியில் நடித்து முடித்தார். நம்பிக்கை மற்றும் உழைப்பின் வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர். படப்பிடிப்பை இத்தனை சீக்கிரம் முடிக்க, கடினமாக உழைத்த எனது படக்குழுவிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளது. இந்த மாத இறுதியில் படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இப்படத்தில் அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க, பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.