
இரண்டே படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டிலும் புதுமையான களத்தில் நேர்த்தியான கதை சொல்லலில் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். அவர் படங்களை வழங்கும் முறையினை காட்டிலும், அவர் படங்களுக்கு வைக்கும் தலைப்பு அதி அழகாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறது.
“புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” தலைப்புகள் இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் தற்போது பிந்து மாதவி, தர்ஷனா பானிக் ஆகியோரை முதன்மை பாத்திரங்களாக வைத்து இயக்கி வரும் திரில்லர் படத்திற்கு என்ன தலைப்பு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. இந்த நிலையில் லிட்டில் சூப்பரஸ்டார் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து இப்படத்தின் தலைப்பான “யாருக்கும் அஞ்சேல்” தலைப்பினை வெளியிட்டுள்ளார்கள். வெளியான நொடியிலேயே அனைவரையும் கவர்ந்து, வைரலாக இத்தலைப்பு பகிரப்பட்டு வருகிறது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இதுகுறித்து கூறியதாவது...
இந்தப்படத்தில் மிக கடினமாக இருந்தது இப்படத்திற்கு தலைப்பு வைக்கும் பணிதான். பல விதமான தலைப்புகளை அலசி, இறுதியாக “யாருக்கும் அஞ்சேல்” எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ரசிகர்கள் முழுப்படத்தினையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்பு தான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்றார்.
படத்தின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது...
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் அப்பணிகளும் முடிவடையவுள்ளது.
இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்.
Third Eye Entertainment சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் “யாருக்கும் அஞ்சேல்” படத்தை தயாரித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக், டிரெயல்ர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.