சென்னை: தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒன்றாக அமர்ந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உணவு சாப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம், சென்னை, எழும்பூரில் உள்ள 'திடீர் நகர்' பகுதிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்குள்ள தலித் மக்களிடம் கலந்துரையாடிய அவர், பாஜக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம் என, தெரிவித்ததோடு, தலித் மக்களுக்காக, மோடி அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். பின், அந்த மக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம், சமீபத்தில், அலகாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக பாஜக தலைவர்களிடம், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியாக அழைத்து பேசி, தமிழகத்தில், கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெறும் வகையில், கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாநில பாஜக தலைவர்களும் தலித்துகளிடம் பேதம் பார்க்காமல் தங்களில் ஒருவராக அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். பாஜகவிலுள்ள சில மேல் ஜாதி என்று கருதப்படும் தலைவர்களுக்கு இதில் பெரிய வரவேற்பில்லை என்றபோதிலும், அமித் ஷா உத்தரவை தொடர்ந்து தங்கள் மனதை மாற்றிக்கொண்டு தலித் வீடுகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.