சென்னை:
சுவாதி கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒன்று. போலீசாரின் செயல்பாடு சரியில்லை என்று மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் இப்போது எங்கே என்றுதான் தெரியவில்லை. போலீசாரின் அயராத உழைப்பு ஒரே வாரத்தில் கொலையாளி சிக்கியது என்று பலரது பாராட்டுக்களை குவிக்கும் நிலையில் தல-தளபதி ரசிகர்களின் இந்த செயல் பெரும் கண்டனங்களை குவித்து வருகிறது.
சுவாதி கொலையில் ஒரு துப்பும் கிடைக்காமல் தவித்த போலீசாருக்கு சிசிடிவியில் கிடைத்த காட்சிகள் கொலையாளி இவன் என்று காட்டினாலும் தெளிவில்லாத அந்த காட்சிகளை வைத்து நிபுணர்களின் உதவியுடன் முடிந்தளவு கொலையாளியின் முகத்தை கொண்டு வந்தனர் போலீசார். மக்களும் உதவலாமே என்று வெளியிடப்பட்ட அந்த புகைப்படங்கள்தான் ரசிகர்களுக்கு விளையாடும் மைதானம் போல் தெரிந்துள்ளது.
கொலையாளி ராம்குமாரின் தெளிவில்லாத முகத்திற்கு பதிலாக விஜய் படத்தை அதில் வைத்து தல ரசிகர்களும், அஜித் படத்தை வைத்து விஜய் ரசிகர்களும் தங்கள் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்களால்தான் தங்களின் விருப்பத்திற்குரிய நடிகர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதை இவர்கள் உணர்வதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது போன்ற செயல் அசிங்கமானது என்பது தெரியாதா. அந்த நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஆனால் இணையத்தில் இவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். படரிலீசின் போது கேவலமாக கமெண்ட் போடுவது, மீம்ஸ் போடுவது என்பதையும் தாண்டி இதுபோன்ற செயல்களை செய்தவர்களை என்னவென்று சொல்வது.
உங்கள் செயல்கள் உருப்படியாக இல்லாதது என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் தமிழகத்தையே உலுக்கிய ஒரு விஷயத்தில் இது போன்ற விளையாட்டுகள் தேவையா? யோசிப்பீர்களா? இதைப்பார்த்தும் யாரும் திருந்தவார்களா என்றால் கேள்விக்குறி தான் பெரிதாக கண் முன்னால் எழுந்து நிற்கிறது.