ராமேஸ்வரம்:
கடந்த ஆண்டில் இந்த நாள் யாருக்கும் மறக்க முடியாத கண்ணீர் நாளாக மாறியிருந்தது. காரணம் மக்களின் மனதில் நிறைந்து நின்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணமே. இன்று அவரது முதல் வருட நினைவு நாள். 


இதனால் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலையை மத்திய அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுனர், இந்திய ஏவுகணை நாயகன், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி என அனைவராலும் போற்றப்பட்ட மக்களின் மனதில் நிறைந்து நின்ற ஒரு மாமனிதர்தான் அப்துல்கலாம். 


கடந்த ஆண்டு ஜீலை 27-ம் தேதி, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார்.  அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.


கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு நினைவிடத்தில், மணிபண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து, அப்துல் கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலையை மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். 


இதில் தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா,  நிலோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



Find out more: