புதுச்சேரி:
அட உங்களை எல்லாம் என்னவென்று சொல்வது என்றுதான் மக்கள் டென்ஷனாகி உள்ளனர். காரணம் இதுதான். பணம் வாங்கி கொண்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை தப்ப வைத்த ஊழியர்களை "கேமரா" போட்டு கொடுக்க இதுதான் தற்போது புதுச்சேரியை புரட்டி எடுத்து வருகிறது.


 புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக் குப்பத்தை சேர்ந்தவன் சரத் என்ற சரத்குமார் (17). இவன் உருளையன் பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் பைக் திருட்டு உட்பட பல திருட்டு சம்பவங்களை நடத்த... பொறி வைத்து பிடித்துள்ளனர் போலீசார்.


பின்னர் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் இவனை அடைத்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சரத்குமார் தப்பி சென்றார். மீண்டும் அவர் கைவரிசையை தொடர்ந்து காட்ட போலீசார் அவனை பிடித்து மீண்டும் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.


ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்திருத்த பள்ளியில் பல்லிகளை தின்று விட்டதாக கூறி அவனை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர். அப்போதுதான் நடந்தது ஒரு அதிர்ச்சி. மருத்துவமனை வாசலில் தங்களை தாக்கி விட்டு சரத்குமார் தப்பி சென்று விட்டதாக ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர்.


சரத்குமார் அடிக்கடி தப்பி சென்று விடுவதால் சீர்திருத்த பள்ளி ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வர வார்டன் மற்றும் ஊழியர்களுக்கு தெரியாமல் சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் ரகசிய கண்காணிப்பு கேமராவை பிக்ஸ் செய்திருந்தனர். இப்போது அது கைகொடுத்துள்ளது.


சரத்குமாரிடம் ரூ.10 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு, சீர்திருத்த பள்ளி வார்டன் மற்றும் ஊழியர்கள், ஜன்னல் கம்பியை உடைத்து தப்பி செல்வதற்கான வழிகளை செய்து காண்பிப்பது, கண்காணிப்பு கேமராவில் தெள்ளத்தெளிவாக பதிவாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதில் தொடர்புடைய வார்டன் ராஜவேலு (42), சீர்திருத்த பள்ளி ஊழியர் பாலசுப்பிரமணியன் (36), சமையல்காரர் சுரேஷ் மற்றும் சீர்திருத்த பள்ளி காவலாளியான குப்புசாமி (56) ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


வேலியே பயிரை மேய்ந்த கதைதான். இப்படியே நடந்தால் வெளியில் திருடிவிட்டு கைதாகி மீண்டும் தப்பி திருட்டில்தானே ஈடுபடுவார்கள்.


Find out more: