இடாநகர்:
பதவி பறிபோன துக்கத்தில் அருணாசலபிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபம் துகி முதல்வராக இருந்து வந்தார். நபம் துகிக்கு எதிராக கலிக்கோ புல் போர்க்கொடி தூக்கினார். இவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஆதரவு தந்தனர்.
தொடர்ந்து மாநில ஆளுநரின் ஒத்துழைப்புடனும் பாஜ ஆதரவுடனும் கலிக்கோ புல் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பில் அருணாச்சலப் பிரதேசத்தில் கல்லிக்கோ புல் தலைமையிலான ஆட்சி சட்டவிரோதமானது. அவரது ஆட்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.
தமது ஆட்சியை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்தே பெரும் துயரத்தில் இருந்து வந்தார் கலிக்கோ புல். இந்நிலையில் இன்று காலை இட்டா நகரில் தம்முடைய வீட்டில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
பதவி பறிபோன துயரத்தில் முன்னாள் முதல்வர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.