சென்னை:
தலையில்லாத முண்டமாக தமிழக காங்கிரஸ் தவிப்பதற்கு காரணமே முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் காரணம் என்று சுட்டுவிரலை நீட்டி குற்றம் சொல்கின்றனர் விபரமறிந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள். அதுவும் அவர் சொன்ன ஒற்றை சொல்தான் இன்று வரை யாரையும் தமிழக காங்கிரசுக்கு தலைவராக கொண்டுவர தடை போட்டுள்ளது என்றும் அடுத்த குற்றச்சாட்டு இளங்கோவன் மீது விழுகிறது.
அப்படி என்ன சொன்னார்... காங்கிரசின் இந்த தள்ளாட்டத்திற்கு காரணம் என்ன? விபரமறிய களத்தில் குதித்தோம். விசாரித்த வகையில கிடைத்த தகவல்கள் பெரிய "திடுக்" திடுக்கை ஏற்படுத்தின. எதிர்பாராத டுவிஸ்ட்டுகள் நிரம்பியவையாக இருக்கிறது காங்கிரசின் நிலை. மிகப்பெரிய வரலாறும், நூறாண்டும் கடந்த காங்கிரசின் இன்றைய தமிழக நிலை கரை தட்டிய கப்பல் போல் உள்ளது. காங்கிரசில் இப்போது உள்ளது போல் எந்த மாநிலத்திலும் இத்தனை மாதங்களாக இல்லாத வகையில் மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் உடனே பதில் கிடைக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அசைக்கமுடியாத ராஜாவாக அரியணையில் அமர்ந்து அதிகாரம் செய்தவர் இளங்கோவன். ஏகப்பட்ட அதிகாரங்களை அவருக்கு அள்ளி வழங்கி இருந்தனர் சோனியாவும், ராகுலும். இதனால்தான் மாநில முதல்வர் தொடங்கி எதிர்கட்சியை வாய் என்ற வாய்க்காலால் தூர்வாரி எடுத்தார் இளங்கோவன். தன்னை எதிர்த்து லாபி செய்த தன் கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவர் மீது காங்கிரசில் கோஷ்டி அமைத்து தனிக்காட்டு ராஜாக்களாக இருந்தவர்கள் கூட ஒருங்கிணைந்து கூட்டுப்போட்டு டில்லியில் போய் போட்டுக்கொடுத்தும் கூட இளங்கோவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தளவிற்கு அவர் தன் அதிகாரத்தை பெற்று வந்திருந்தார் என்பதுதான் உண்மை.
சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் நிலை தலைகீழானது.
நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. போட்டியிட்ட இடங்களில் 3ல் ஒரு பங்கு கூட பெற முடியாத நிலை. இதை விட இந்த தோல்விக்கு காரணம் தமிழக தலைவர் இளங்கோவன் என்ற குற்றச்சாட்டு பரவலாக எதிரொலித்தது காங்கிரஸ் கட்சியில். தன் இஷ்டப்படி தனி ராஜாங்கம் நடத்தியவரை அழைத்து விசாரிக்க தலைமை யோசித்தது. ஆனால் ஒரு முக்கிய குற்றச்சாட்டுதான் அவரை உடனே டில்லிக்கு இழுத்தது. என்ன குற்றச்சாட்டு தெரியுங்களா? சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் பலரிமும் பணம் வசூல் செய்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக டில்லிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதான் நேரடி விசாரணைக்கு இளங்கோவனை அழைத்துள்ளது.
ராகுலின் நேரடி விசாரணையால் தன் இயல்பை போலவே கோபப்பட்டுள்ளார் இளங்கோவன். பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டு வந்தவர். சில நாட்கள் அமைதியாக இருந்து விட்டு பின்னர் தன் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டார். கண்டிப்பாக தன்னை மீண்டும் அழைத்து ராஜினாமாவை வாபஸ் வாங்க சொல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவே இல்லை. ராஜினாமா ஏற்கப்பட்டது என்ற தகவல் அவரை வந்து சேர்ந்துள்ளது. இதற்கு பின்னர்தான் இவர் கட்சிக்காரர்களிடம் மனம்விட்டு பேசுவதாக நினைத்து வார்த்தைகளை விட்டுள்ளார். என்ன தெரியுங்களா? அவரு நேரு பேரன்ன்னா... நான் பெரியார் பேரன் என்று. இந்த வார்த்தைகள் சோனியாவையும், ராகுலையும் சென்றடைய பெரிய அளவில் அதிருப்தி அடைய செய்துள்ளது.
இளங்கோவன் மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருந்த சோனியா அதற்கு பிறகு தன்னை சந்திக்க முயற்சி செய்த அவரை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய கதையும் நடந்துள்ளது. பின்னர் எத்தனை முறை முட்டி மோதியும், இளங்கோவன் நிலை அந்தோ பரிதாபம்தான். குஷ்பு கூட சோனியாவை சந்தித்துவிடுகிறார். ஆனால் இளங்கோவனால் முடியவில்லை. இப்படியே நாட்கள் வாரங்களாக மாற, அதுவும் மாதங்களாக மாற காங்கிரஸ் கட்சி தலையில்லாத முண்டமாக தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இளங்கோவனின் நாக்கு என்ற சாட்டை மேலிடப்பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் மீது திரும்பியுள்ளது. தமிழகத்திற்கு தலைவர் நியமனம் செய்யப்படாததற்கு காரணம் அவர்தான் என்று தனக்காக "லாபி" செய்தவரையே பதம் பார்த்துவிட்டார் இளங்கோவன். இனி இளங்கோவன் என்ன செய்தாலும் தலைமை அவரை கண்டுக்கொள்ளாது. ஆடிய ஆட்டம் என்ன... இப்ப ஓரம்கட்டி கிடப்பதும் என்ன என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
இளங்கோவன் மீது கோபம் என்றால் அவரை கட்சியை விட்டு விலக்க வேண்டியதுதானே.... இப்படி தலைவர் பதவியை நிரப்பாமல் இருந்தால் என்ன செய்வது என்று கவலைப்படுகின்றனர் அடிமட்டத் தொண்டர்கள். இந்த குரல் சோனியா... ராகுலை எட்டினால் சரிதான்.