டாக்கா:
ஆச்சரியம்... அதிசயம் என்றுதான் இதை கூற வேண்டி உள்ளது. என்னவென்று தெரியுங்களா?
ஒன்றல்ல... இரண்டல்ல... சமார் 1000 கி.மீ. தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை உயிருடன் மீட்கப்பட்ட அதிசய சம்பவம்தான் அது.
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு. மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அரசு நிர்வாகம் ஏற்பாடு செய்தது. மக்களை பாதுகாத்து விடலாம். ஆனால் காட்டு விலங்குகளை...
இங்குதான் வினையின் விளையாட்டு ஆரம்பித்தது. கூட்டத்துடன் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பெண் யானை பிரிந்து சென்றது. இந்த பெண்யானைதான் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. கரைபுரண்டு ஓடிய வெள்ளநீரில் தவித்த அந்த யானையை நீரின் வேகம் இழுத்து சென்றே விட்டது.
முயற்சிகள் பலனின்றி போக வெள்ளத்தின் வேகத்தில் யானையால் கரை ஒதுங்க முடியவில்லை. கடந்த ஜீன் மாதம் முதல் 6 வாரங்களாக அடித்துச் செல்லப்பட்ட யானை இங்கிருந்து பக்கத்து மாநிலமான வங்காள தேசத்துக்குள் புகுந்து ஜமால்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் குளத்தில் இறுதியாக கரை ஒதுங்கியது. இங்குதான் நடந்தது ஒரு ஆச்சரிய சம்பவம். ஆமாம்...
வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட நிலையிலும் யானை இறக்கவில்லை. சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்தது. குளத்தில் தத்தளித்தபடி மூழ்கி கொண்டிருந்தது. இதைப் பார்த்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் அந்த யானையை குளத்தில் இருந்து மீட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வங்காள தேச வன அதிகாரிகள் மயக்க நிலையில் இருந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். தற்போது அது சபாரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அது இந்திய எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தூரம் வரை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து அந்த யானையை மீட்டு வர இந்திய அதிகாரிகள் வங்காள தேசம் சென்றனர். ஆனால் யானை மிகவும் பலவீனமாக இருந்தது. இதனால் சிறிது நாட்களுக்கு பிறகு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.