ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருவதால் மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். விஷயம் இதுதான்.


ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இந்திய - இலங்கை கடல் எல்லை பகுதிகளான சக்கத்தீவு, நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடிப்பது வழக்கம்.


இதேபோல் நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கச்சத்தீவு பகுதியில் 3 இலங்கை கடற்படை கப்பல்களும், நெடுந்தீவு பகுதியில் 3 கடற்படை கப்பல்களும் அணி வகுத்து நின்றிருந்தன.


வழக்கத்திற்கு மாறான இந்த செயலால் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான மீனவர்கள் அந்த பகுதியில் இருந்து சற்று தள்ளி மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது 6 குட்டி ரோந்து படகுகளில் 30-க்கும் அதிகமான இலங்கை கடற்படையினர். மீனவர்கள் மீன் பிடித்த பகுதிக்கு வந்தனர். இங்கு மீன்பிடிக்காதீர்கள். உடனே கிளம்பிச் செல்லுங்கள் என்று எச்சரிக்கை விடுக்க... தொடர்ந்து அவசர அவசரமாக ராமேசுவரம் மீனவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த தங்கள் வலைகளை எடுத்தனர்.


அந்த நேரத்தில் சில வலைகளை கடற்படையினர் அறுத்துள்ளனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி கடலுக்குள் வீசியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் சில மீனவர்கள் நேற்று இரவே கரை திரும்பி விட்டனர்.


மீனவர்கள் தரப்பில் கூறுகையில்... மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல் விடுத்தனர் இலங்கை கடற்படையினர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


மீண்டும்...மீண்டும் இலங்கை இந்த விஷயத்தில் அட்டூழியம் செய்து வருவதை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.



Find out more: