தெலுங்கானா:
வெள்ளி மங்கைக்கு நாங்க கொடுக்கிறோம்... ரூ. 5கோடி என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. யாருக்கு?
வேறு யாருக்கு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்குதான். இந்த பரிசை தெலுங்கானா அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து வாழ்த்து மற்றும் பரிசு மழையில் அவர் நனைந்து வருகிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 சதுர யார்டு வீட்டு மனையும், குரூப்-1 நிலையில் அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
நீங்க அப்படின்னா... நாங்க இப்படின்னு சிந்துவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய், வீட்டுமனை வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
பயிற்சியாளர் கோபிசந்துக்கு ஒரு கோடி ரூபாயும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சிக்கு ஒரு கோடி ரூபாயும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.