புவனேஸ்வர்:
உதவி செய்ய மறுத்தவர்களை எண்ணி நொந்து போய் காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்த மனைவியின் உடலை 10 கி.மீ. தூரத்திற்கு தூக்கியே சென்றார் கணவர். இதை கண்ட உள்ளூர் பத்திரிகையாளர்களின் நடவடிக்கையால் கலெக்டரின் உதவி அவருக்கு கிடைத்தது.


உதவி செய்ய வழியிருந்தும்... அதை செய்யாத இதயமில்லாதவர்கள் நிறைந்த இடமாக இந்தியா மாறி வருகிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது இந்த சம்பவத்தை கேள்விப்படும் போது.


ஒடிசாவின் கலாஹன்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவிக்கு காசநோய். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தானா மஜ்கி வசித்து வரும் பகுதி ஆஸ்பத்திரியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதனால் தன் மனைவியின் உடலை அங்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் உதவியை நாடினார் அவர்.


வசதி இல்லாதவர்கள் இறந்தவரின் உடலை இலவசமாக கொண்டு செல்வதற்காக அரசு மருத்துவமனைகளில் மகாபிரயாணா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவருக்கு உதவி செய்ய அங்கு யாருமே இல்லை. 


இதனால் இறந்த மனைவியின் உடலை துணியில் சுற்றி, தனது தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ., நடந்தே சென்றுள்ளார். இத்தகவல் காட்டுத்தீ போல பரவ உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் உடனே கலெக்டரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கண்டனமும் தெரிவிக்க... உடனடியாக ஆக்சனில் இறங்கினார் கலெக்டர். 


மஜ்கிக்கு ஆம்புலன்ஸ் உதவி அளிக்கப்பட்டு இறுதிசடங்கிற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யுமாறு தாசில்தாருக்கும் உத்தரவு பறந்தது. ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் மனைவியின் மஜ்கி சுமந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அனைத்து ஊரிலும் ஏழைகளுக்கு உதவிகள் மறுக்கப்படுவது இதன் வாயிலாக வெட்டவெளிச்சமாகி உள்ளது.


Find out more: