தஞ்சாவூர்:
தஞ்சையின் மையப்பகுதி... அந்த செல்போன் விற்பனை மையத்தில் சிறு மக்கள் குழு கூடி நின்றிருந்தனர். உள்ளே உச்சஸ்தாபியில் ஒரு பெண் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். நமக்குதான் இதுபோன்ற விஷயங்கள் அல்வா சாப்பிடுவது போல் ஆயிற்றே... மெதுவாக கும்பலுக்குள் புகுந்து அந்த கடைக்குள் நுழைந்தே விட்டோம.
அந்த பெண் சத்தம் இப்போது தெளிவாக நம் காதுகளில் விழுந்தது. அந்த கடை செல்போன் மட்டுமின்றி பல்வேறு கம்பெனிகளின் சிம்கார்டு... ரீசார்ஜ் விற்பனை செய்து வருகிறது என்று தெரிந்தது.
அந்த பெண் இப்போது இன்னும் கோபத்தில் எரிமலை ஆகாத குறைதான். என்ன விஷயம் என்று நம் அருகில் நின்றிருந்தவரிடம் விசாரிக்க... ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்குது சார். இந்த பொண்ணு போன வாரம் வந்து ஒரு கம்பெனியோட புது சிம் கார்டு வாங்கி இருக்காங்க... அதுக்கு ஐ.டி. ப்ரூப் கொடுத்து இருக்காங்க... இன்னைக்கு அந்த அம்மாவுக்கு போலீசில் இருந்து போன் செஞ்சாங்களாம். இவங்க வாங்கின சிம் கார்டில் இருந்து ஒரு பொண்ணுக்கு தொடர்ந்து கண்டபடி எஸ்.எம்.எஸ். போயிருக்குன்னு. ஒரு பொண்ணே எப்படி சார் இன்னொரு பொண்ணுக்கு இப்படி மெசேஜ் அனுப்ப முடியும்.
அதுமட்டும் இல்ல சார்... அந்த எஸ்எம்எஸ் போன நம்பர் இவங்க வாங்கவே இல்லியாம். ஆனால் இவங்க பேரில இவங்க ஐ.டி. புரூப், போட்டோவை வைச்சு சிம்கார்டு வாங்கப்பட்டு இருக்கு. போன வாரம் இங்கதானே வந்து வாங்கினேன். ஒரு சிம் தான் வாங்கினேன்னு அந்த பொண்ணு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு என்று அங்கு நடந்ததை மூச்சு விடாம சொல்லி முடிச்சார்.
சிம்கார்டு விற்பனையில் அப்படி என்ன தில்லுமுல்லு நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நம் நண்பர்களுடன் களமிறங்கி விசாரித்தால் அதிர்ச்சியோ அதிர்ச்சி ரகம். ஆரம்ப காலத்தில் சிம் கார்டு வாங்குவதென்றால் பெரும் பாடு... திண்டாட்டம்தான். சிம் கார்டு கிடைத்தாலும் உடனே ஆக்டிவேசன் ஆகாது... அதற்கு 2 நாட்களில் இருந்து 3 நாட்கள் ஆகும். அதுமட்டுமா... அட்ரஸ் புரூப் சரியானதுதானா என்று கம்பெனியில் இருந்து போன் செய்து விசாரிப்பார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. சிம்கார்டு வாங்கும்போதே அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆக்டிவேசன் செய்து தருகின்றனர். அதுமட்டுமா.. சில இடங்களில் ஆக்டிவேசன் செய்த சிம்மையே தருகின்றனர். அப்போது தப்பு எங்கு நடக்கிறது. அதுதான் விஷயமே... ஒவ்வொரு கம்பெனி சிம்கார்டு டீலர்களுக்கும் சிம்கார்டு விற்பனை என்பது கழுத்தை நெறிக்கும் ஒன்று. கண்டிப்பாக இந்த மாதத்தில் இத்தனை சிம்கார்டுகள் விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் கம்பெனிகளின் டார்கெட்டாக இருக்கும்.
அவர்கள் என்ன செய்கிறார். சிறு சிறு விற்பனை கடைகளில் சிம்கார்டுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். எப்படியாவது விற்றுக் கொடு கமிஷனில் கூடுதலாக தருகிறோம் என்ற வாக்குறுதியுடன். இதனால் அந்த ஆபர்.. இந்த ஆபர்... என்று அவர்களும் கூப்பாடு போட்டும்... சிம்கார்டு விற்பனையை தொடங்குகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் இதை விற்றால் கூடுதல் கமிஷன் மற்றும் பிற சலுகைகள் என்பதால் புதுசாக சிம்கார்டு வாங்க வருபவர்களின் ஐ.டி. ப்ரூப், போட்டோ உட்பட அனைத்து ஆவணங்களையும் அவர்களின் அனுமதியின்றி இன்னும் சில சிம்கார்டுகளுக்கு அதை பயன்படுத்துகின்றனர்.
இதில் அந்த கடைகளுக்கு ரெகுலராக ரீசார்ஜ் செய்ய வருபவர்கள் யாராவது ஆவணங்கள் இன்றி சிம்கார்டு கேட்டால் பிறர் ஆவணங்களில் எடுத்த சிம்கார்டு அவர்களுக்கு கைமாறுகிறது. அவர்களிடம் கூடுதல் பணமும் பெற்றுக் கொள்கின்றனர். அதாவது சிம்கார்டு ரூ.50 என்றால் ஆவணமின்றி அது அவர்களுக்கு ரூ.150க்கு கிடைக்கும். ஒற்றைக்கு இரட்டை வருமானம்...
அதுமட்டுமா... இப்போது தஞ்சை, திருச்சி, கோவை, மதுரை உட்பட பல பெரிய நகரங்களில் கட்டுமானப்பணிகளுக்காக பிற மாநிலத்தவர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கும் இந்த சிம்கார்டுகள் எவ்வித ஆவணமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அவர்களின் ஆவணம் இங்கு செல்லத்தக்கது அல்லவே. அதனால் அவர்களுக்கு இப்படி பிறருடைய ஆவணங்களை ஒன்று இரண்டாக ஜெராக்ஸ் எடுத்து அதிலிருந்து சிம்கார்டுகளை ஆக்டிவேசன் செய்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
அப்படி ஆவணம் இல்லாமல் விற்பனை செய்வதால் அதை வாங்கும் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து இங்குதான் வந்து ரீசார்ஜ் செய்கின்றனர். அதில் ஒரு வருமானம். இப்படி "ராங்" காக விற்பனை செய்யப்படும் சிம்கார்டுகளில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும எது வேண்டுமானாலும் அனுப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதில் சிக்குபவர் ஆவணம் கொடுத்தவராகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் அந்த கடையில் நடந்தது.
இது நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும் செயல்தானே. சிம் கார்டுகள் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக பல தில்லு முல்லுகள் நடக்கிறது. வருவாய் கிடைக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் செய்யலாமா?
இப்படி ஒருவரின் பெயரிலேயே பல கம்பெனி சிம்கார்டுகள் போலியாக உலா வருகின்றன. பிடித்தவர், பிடிக்காதவர் என்று பலருக்கு இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை. அவருக்கு எந்த வகையிலாவது தொந்தரவு கொடுக்க நினைக்கிறேன். அதற்கு இதுபோன்ற ஒரு சிம்கார்டு இருந்தால் போதுமே... சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்ந்து போன் செய்து வம்பு இழுக்கலாம். அல்லது வேறு பல வகையிலும் தொந்தரவு தரலாம். ஆனால் இதனால் எனக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. காரணம். சிம்கார்டுதான் என்பெயரில் இல்லையே...
அதனால் நான் பயப்பட அவசியம் இல்லை. அவ்வளவு ஏன்? பிடிக்காதவர்களுக்கு பிடிக்காத மெசேஜ்களை அனுப்பலாம். பேலன்ஸ் தீர்ந்து போய்விட்டால் அந்த சிம்கார்டை உடைத்து எறிந்து விட்டு போய்விட்டால் அவ்வளவுதான். என்ன செய்ய முடியும். அந்த சிம்கார்டு வாங்கியவன் நான் இல்லையே... விற்றவரும் இதை வெளியில் சொல்ல முடியாது. அப்போ சிக்கலில் சிக்குவது... ஒரிஜினல் ஆவணங்கள் கொடுத்த நபர்தானே.
இப்படிதான் ஏராளமான சிம்கார்டுகள் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ளன. இது தஞ்சை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், பழனி, திண்டுக்கல், சென்னை என அனைத்து பெரிய நகரங்களில் நடக்கிறது. கிராமப்பகுதியில் இதுபோன்று செய்ய வாய்ப்பில்லை. ஆனால் நகரத்தில் இதற்கு எவ்வித தடையும் இல்லை. அதனால் டீலர்கள்.. சப்-டீலர்களை கவனிக்க அவர்கள் சிறுசிறு கடைகளில் இப்படி விற்பனை செய்வதை கண்டுக்காமல் இருக்கின்றனர். சிம்கார்டு விற்பனை செய்யும் கம்பெனிகளும் இதை கண்டுக்கொள்வதில்லை.
இதுபோன்ற சிம்கார்டுகள் தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் கரங்களுக்கு சென்றால்... நிலைமை என்னவாவது...? யோசியுங்கள் விற்பனையாளர்களே... உண்மையில் இதில் சிக்குவது உங்களை நம்பி ஆவணங்களை கொடுப்பவர்கள்தான். தங்களின் " டார்கெட்டில் " இவர்கள் பலியாவதா? இதுபோன்ற செயல்களும் தீவிரவாதம்தான். நம் வீட்டிற்குள் நமக்கு அறிமுகம் இல்லாத ஆள் உட்கார்ந்து கொண்டு இது என் வீடு என்று கூறினால் எப்படி இருக்கும். இனியாவது சிம்கார்டு விற்பனையில் அலட்சியம் காட்டாமல் ஒருவருக்கே பல சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து அந்த கம்பெனிகள் தீவிர விசாரிக்க வேண்டும். இல்லாவிடில் அப்பாவிகள் அல்லல்படுவது தொடர்கதையாகிவிடும்.