சென்னை:
அரசு பள்ளிகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டிருந்தால் அதை நீக்க பரிசீலிக்கவேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ் செய்துள்ளது. 


 சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பள்ளிகள், கல்வி நிலையங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாயத்தின் பெயர்களை குறிக்கும் வகையில் உள்ளது. எனவே இதுபோன்ற பெயர்களை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, சிறுபான்மையின கல்லூரிகளில்தான் சாதி அல்லது சமுதாயப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


 அந்தக் கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் நிர்வாகத்தில் தேவையின்றி, தமிழக அரசு தலையிட முடியாது. மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு கல்லூரிகள், பள்ளிகளில் எதுவும் அதுபோன்ற சாதிப் பெயர்களில் இல்லை என்றார்.


 அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வக்கீல் சாதி, சமுதாயப் பெயர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இருந்தால் அதை நீக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளனர்.


Find out more: