தஞ்சாவூர்:
விர்... விர்ரும்... விர்ரும்... கொசு போல நம்மை சுற்றிவிட்டு சென்ற அந்த இருசக்கர வாகனத்தை சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. பரபரப்பான தஞ்சையின் மெயின் சாலை. வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி... மக்கள் நடமாட்டம் மிகுந்த இடம். அங்குதான் நமக்கு இந்த கண்சிமிட்டும் நேரத்தில் கடந்த வாகனத்தால் சற்று குறுகுறுப்பு.
அட... இப்படியும் ஒரு வண்டியா... ஒருவேளை "பெரிய கை" யாராவது பாரினில் இருந்து இறக்குமதி செய்திருப்பார்களோ... என்றபடி மீண்டும் அந்த இருசக்கர வாகனம் வருகிறதா என்று கழுத்தையும், உடம்பையும் 360 டிகிரிக்கு சுற்றினோம்...சுற்றினோம்... கழுத்தில் சுளுக்கு விழாத குறைதான்.
அட கைக்கு எட்டிய தோசை... வாய்க்கு கிடைக்காவிட்டால் எவ்வளவு டென்ஷன் வரும். அதுபோல்தான் நம்முடைய நிலையும் இருந்தது. இதில் வெயில் வேறு வெளுத்து வாங்கியது. சுற்றும்முற்றும் பார்த்த நம் கண்களில் மோர் கிடைக்கும் என்ற போர்டு பட அங்கு சென்று ஒரு கிளாஸ் மோர் வாங்கி குடிக்க மீண்டும்... அந்த விர்ரும் சவுண்ட்... அட மோர் அப்புறம் என்று நம்மை கிராஸ் செய்து போக பார்த்த அந்த இருசக்கர வாகனத்தை குறுக்கில் விழுந்து தடுக்காத குறைதான்.
குழந்தைகள் ஓட்டும் பைக் போல் இருந்தது. அந்த வண்டியை ஓட்டி வந்த வாலிபருடன் ஆரம்பித்தது நமது வழக்கமான விசாரணை. ஏம்பா.. இது வண்டிதானா? ஏதோ பாரின்ல சின்ன புள்ளைங்க ஓட்டும் சின்ன பைக் போல இருக்கே...
சார்... என்ன இப்படி சொல்லீட்டீங்க... இது ஹோண்டா கம்பெனி தயாரிப்பு சார். சென்னையில் ஒரு சில பகுதியில் வந்திடுச்சு. ஆனா நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுதான் பர்ஸ்ட் டைம். கும்பகோணத்திற்கு வந்து இருக்கு. இப்ப தஞ்சாவூரில் ஒருத்தர் வாங்கி இருக்கார். அவருக்கு டெலிவரி கொடுக்கத்தான் கொண்டு வந்துள்ளேன் என்றார் மூச்சு விடாமல்.
அட பொறுமையா சொல்லுப்பா... என்றபடி வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தோம். அதை டூவீலர் என்றே சொல்ல முடியாது. அதற்கான இலக்கணத்தை உடைத்தது போல் இருந்தது. அமைப்பே வித்தியாசமாக இருந்தது. சின்ன சைஸ்... தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய சைஸ் நீளவாக்கில் இருக்கும் பெட்டியை போல் இருந்தது.
இது விலை என்னப்பா... என்று கேட்க... 55 ஆயிரம் ரூபாய் வந்திடும் சார். எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் சேர்த்து வந்திடும் என்ற அந்த வாலிபர் வண்டியை ஒரு சுற்று சுற்ற அது வட்டமாக அடித்தது.
இதை சாலையில் சென்ற அனைவரும் வித்தியாசமாக வேடிக்கை பார்த்தனர். நமக்கு மழைக்காலத்தில் நம் தலைக்கு மேல் நொய்ங்க்... என்று வட்டமிடும் கொசுதான் ஞாபகத்திற்கு வந்தது. அந்தளவிற்கு இந்த டூவிலர் இருந்தது.
ஹோண்டா கம்பெனி நவி என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த வண்டி இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஓட்டலாமாம். செல்ப் ஸ்டார்ட்டர் கொண்டது.
ஸ்மூத்தாக ஓடும் இந்த வண்டி இரண்டு பேரை மட்டுமே அனுமதிக்கும். பார்ப்பதற்கு ரேஸ் கார் போல் இருக்கிறது. அந்த வாலிபரிடம் மேலும் பேசியதில் நல்ல மைலேஜ் கொடுக்கிறதாம். வண்டியும் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாக இருப்பதால் வாலிபர்கள் மத்தியில் பிரபலமாகும். சின்ன சைஸாக இருப்பதால் நெருக்கடியான இடத்திலும் புகுந்து வந்து விடலாம் என்று சொன்ன அந்த வாலிபர் அந்த ஹோண்டா நவியை அட்டகாசமாக ஓட்டிக் கொண்டு பறந்தார் பாருங்க...
சரி... இது புதுசு கண்ணா புதுசு... இனி ரோட்டுல இதுவும் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளும் என்று நினைத்தப்படி நம்ம "நட" ராஜா" வண்டியை தட்டினோம்....