சென்னை:
நாய்குட்டி ஒன்றை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிய மனசில் ஈரமில்லாத மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அபராதமாக தலா ரூ.2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 


கடந்த ஜீலை மாதத்தில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பிய சம்பவம் சென்னை குன்றத்தூரில் 4வது மாடியில் இருந்து நாய் குட்டியை ஒருவர் கீழே தூக்கி வீசும் வீடியோ காட்சிதான்.


இதுகுறித்து புகாரின் பேரில் நடந்த விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (22), அதை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இருவரும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்.


இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர்களின் பெற்றோரே இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். பின்னர் ஜாமீனில் இருவரும் வெளியில் வந்தனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் நாயை தூக்கி வீசிய 2 மாணவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். அந்த தொகையை பல்கலைக்கழகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு இருந்தது.


பின்னர் கவுதம்சுதர்சன், ஆசிஸ்பால் இருவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை அகில இந்திய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


விலங்குகள் துன்புறுத்தல் வழக்கில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தளவிற்கு அபராதம் விதிக்க காரணம் சமூக வலைதளங்களில் மக்கள் வெகுவாக கொதித்தெழுந்ததுதான்.



Find out more: