சென்னை:
ஆமாங்க... அவர் இடைத்தரகர்தான் என்று போலீசார் விசாரணையில் பச்சமுத்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.
கோர்ட் உத்தரவுபடி ஒரு நாள் போலீஸ் காவலில் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவை எடுத்தனர். அப்போது எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரிக்கு மாயமான மதன் இடைத்தரகராக செயல்பட்டார் என்பதை பச்சமுத்து ஒப்புக்கொண்டுள்ளதாக செயதிகள் உலா வருகிறது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவை பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதன் மாயமான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றப்பிரிவு போலீசார் பச்சமுத்துவை கஸ்டடியில் எடுத்து நடத்திய விசாரணையில் அவரிடம் 165 கேள்விகள் கேட்கப்பட்டதாம்.
இந்த விசாரணையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரிக்கு மதன் இடைத்தரகராக இருந்து செயல்பட்டது உண்மைதான் என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதனால் இந்த வழக்கு பெரும் பரபரப்பு கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் காணாமல் போன மதன் குறித்தும் விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.