புதுடில்லி:
திறந்து விடு... 10 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விடு என்று கண்டிப்பு காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட்.


எதற்காக... வறட்சியால் வாடும் பயிர்களை காப்பாற்ற காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்துக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜீன், ஜீலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு 50 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும்.


ஆனால் வழக்கம்போல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. கேட்டதற்கும் மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதுகுறித்து கர்நாடகா தன் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு காவிரியில் இருந்து நாள்தோறும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


காவிரி கண்காணிப்பு குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுகி தங்களது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும். 3 நாட்களுக்கு பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும்.


2 அரசுகளின் நிலையையும் அறிந்து 4 நாட்களில் காவிரி கண்காணிப்பு குழு இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.


மேலும் காவிரியில் இருந்து கர்நாடகம் 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுமாறு உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. எப்படியோ வாடும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வந்தால் சரிதான் என்கின்றனர் விவசாயிகள்...


Find out more: