பெங்களூரு:
ரூ.100க்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டதால் தற்போது கம்பி எண்ணி வருகின்றனர் போராட்டத்தின் போது கலவரம் செய்தவர்கள் என்று ஒரு தகவல் உலா வந்து பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
என்ன விஷயம் தெரியுங்களா? காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் பெரும் வன்முறையே வெடித்தது.
தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெங்களூரு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்திற்கு சொந்தமான 42 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாக்யபநீ (22) என்ற பெண்ணும் ஒருவர். இந்நிலையில் இவரது தாயார் எல்லம்மா தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று ரூ.100ம், பிரியாணி பொட்டலம் தருவதாக கூறி எனது மகளை போராட்டக்காரர்கள் அழைத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பிரியாணிக்கு ஆசைப்பட்டு இப்போது கைதாகி சிறை கம்பிகளை எண்ணி வருகிறார் அந்த பெண்.