தஞ்சாவூர்:
விர்...விர் என்று விரைந்த செல்லும் வாகனங்கள். தஞ்சை நகரின் முக்கியமான பகுதியாக உள்ள ஆற்றுபாலம் பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் அதிகமாகவே இருக்கும். காரணம். அப்பகுதியில்தான் எல்.ஐ.சி., மாநகராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், கோர்ட் என அடங்கி உள்ளது.


ஏதாவது ஒரு வாகனம் தேங்கி நின்றால் போது நெடுந்தூரத்திற்கு இருபுறமும் வாகனங்களின் ஊர்வலம்தான். இப்படிப்பட்ட அந்த பகுதியில்தான் நேற்று மதியம் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த பகுதியில் மதியம் 2 மணியளவில் வாகன நெரிசல் அதிகளவில் இருந்தது. பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்களும், எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்களும் என்று பெரும் நெருக்கடி. இடையில் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு பல பணிகளுக்காக வந்த மக்களின் நடமாட்டம் வேறு. இந்நிலையில் சாலையில் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது.


இதனால் இருபுறமும் வந்த வாகனங்கள் தேங்கி பின்னர் மெதுவாக நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதை பணியில் இருந்த டிராபிக் போலீசார் அப்துல்லா மற்றும் பிரேம்நாத் ஆகியோர் பார்த்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்தளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட காரணமாக இருந்த சில வாகனங்களை உடனே அப்புறப்படுத்த கூறினர். ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை கூட அதன் உரிமையாளர்கள் எடுத்துக் கொண்டு நகர்ந்தனர்.


ஆனால் சாலையின் மீது நிறுத்தப்பட்டு இருந்த அந்த கார் மட்டும் அங்கிருந்து நகரவே இல்லை. இதை பார்த்த போக்குவரத்து போலீசார் அப்துல்லா... அந்த காரின் அருகில் வந்து யாருடையது இந்த கார் என்று கேட்க... அருகில் இருந்த கடையில் டிப்டாப்பாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒருவர் எழுந்து என்னுடைய கார்தான் என்று தெரிவிக்க... சார்... காரை இங்கிருந்து எடுக்க போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று டிராபிக் போலீஸ் அப்துல்லா சொல்ல... அவ்வளவுதான் அந்த நபருக்கு வந்த கோபத்தால் அந்த இடமே பரபரப்பால் அதிர்ந்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.


தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதி சாலையில் காரை நிறுத்தி பிரச்னை செய்த டிப்டாப் நபர்

Displaying 29.jpg


எடுக்க முடியாது... நான் எஸ்.பி. ஆபீசில் போய் சொல்லிக் கொள்கிறேன் என்று அவர் எகிற ஆரம்பித்து விட்டார். அதற்கும் பொறுமையாக டிராபிக் போலீஸ் அப்துல்லா பதில் அளிக்க அவருக்கு உதவியாக வந்தார் பிரேம்நாத்... இவரும் அந்த டிப்டாப் மனிதரிடம் சார்... இரண்டு பக்கமும் பஸ்சும், காரும் வந்துகிட்டு இருக்கு. இப்படி நிறுத்தினா எப்படி காரை ஓரங்கட்டுங்க என்று கூற... அந்த நபரோ மேலும், மேலும் எகிற ஆரம்பித்துவிட்டார்.


இதனால் மீண்டும் இருபுறமும் வாகனங்கள் வரிசைக்கட்ட... பொறுமையிழந்த போலீசார் இருவரும்... காரை இப்ப எடுக்கறீங்களா இல்லியா... டிராபிக் நெரிசல் ஏற்படுகிறது என்று கண்டிப்பு காட்ட... அருகில் இருந்த வேறுசிலர் அந்த டிப்டாப் நபரிடம் காரை எடுங்க... என்று கூறினர். இருப்பினும் அவர் வீம்பு பிடிக்க... தேங்கி நின்ற வாகனங்களை டிராபிக் போலீசார் சரி செய்தனர். இப்படியே சில நிமிடங்கள் போலீசாரை டென்ஷன்படுத்தி விட்டு அந்த டிப்டாப் நபர் அங்கிருந்து காரை எடுத்து கொண்டு பறந்தார்.


வேகாத வெயில் பணியை செய்யும் போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மக்களின் கடமை அல்லவா? நாமே அவர்களுக்கு தொல்லை கொடுத்துவிட்டு போலீசார் அப்படி செய்தனர்... இப்படி செய்தனர் என்று குற்றம் சாட்டுவதும் முறையில்லையே... அந்த டிப்டாப் நபர் தன் வார்த்தைகளின் வேகம் காட்டிய போதும் டிராபிக் போலீசார் அப்துல்லா மற்றும் பிரேம்நாத் இருவரும் கண்ணியத்துடன் நடந்து கொண்டதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 


போலீசார் என்றால் வேறொரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மக்களுக்கு நேற்று போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்தி அதே நேரத்தில் பொறுமையையும் கடைப்பிடித்த அந்த 2 போலீசாரும்... காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை ஏற்படுத்தி கொடுத்துவிட்டனர். நாமும் பாராட்டி சென்றோம்....


Find out more: