புதுடில்லி:
சுவாதி கொலை வழக்கில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை பிரச்னையில் இன்று மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றத்தில் அவரது தந்தை தாக்கல் செய்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த 18-ந்தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.
ராம்குமாரின் தந்தை பரமசிவம்
ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தனியார் ஆஸ்பத்திரி டாக்டருக்கு பதில், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரை கூடுதலாக நியமித்து உத்தரவிட்டார்.
இதனால் ராம்குமாரின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் ஒரு மேல்முறையீடு செய்தார். அதில் பிரேத பரிசோதனையில் தனியார் டாக்டரை அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது.
இதை விசாரித்த மூன்றாவது நீதிபதி என்.கிருபாகரன், ராம்குமார் உடலை செப்டம்பர் 30-ம் தேதி வரை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் அவரது தந்தை உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்காகவா ஆசைப்பட்டாய் ராம்குமாரா... இப்படி இறந்தும் அவஸ்தை படவேண்டும் என்றா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.