தர்மபுரி:
சேலம் அருகே இன்று அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.
பஸ் மேட்டூர் பிரிவு ரோடு வழியாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு நுழைய முயன்றது. அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. கரூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு மணல் லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்... அலறினர்... உடன் இதுகுறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் பறந்தது.
பின்னர் மேச்சேரி போலீசார் விரைந்து வந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். காயம் அடைந்த 15-க்கும் அதிகமானோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் பல கி. மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.