சென்னை: வடபழனியில் உள்ள ஃபோரம் மால் வணிக வளாகத்தில் செயல்படும் தியேட்டரில் திரைப்படத்தை ஒளிப்பரப்புவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தியேட்டருக்கு சிலர் எழுந்து நிற்காததால் ஆத்திரமடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்களை அடித்து துவைத்துள்ளனர். தியேட்டர்களில் திரைப்படத்தை ஒளிப்பரப்புவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அப்போது தியேட்டரில் இருப்பவர்கள் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் சென்னை வடபழனியில் ஃபோரம் மாலில் உள்ள தியேட்டர் ஒன்றில் இன்று திரைப்படத்தை ஒளிப்பரப்புவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்திருந்த நான்கு ரசிகர்கள் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் 4 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த தகராறால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது