டெல்லி ஜந்தர் மந்தரில் தற்சமையம் இரவு பகலாக போராடி வரும் விவசாயிகளுக்கு தினமும் மூன்று வேளையும் நல்ல உணவு வழங்கி தங்கள் ஆதரவு அளித்து வருகிறது குருத்வாரா பிரபந்தக் கமிட்டி. டெல்லி பாபா கரக் சிங் மார்கில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் பிரபல தலமான பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு நேரில் வரும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தினமும் குறைவின்றி பாரபட்சமின்றி அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு ஏற்பாடாக ஜந்தர் மந்தரில் போராடி வரும் நம் தமிழக விவசாயிகளின் உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான நல்ல உணவு மட்டும், விவசாயிகள் அனுப்பி வைக்கும் ஒரு பிரதிநிதி மூலம் டிரம்களில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
போராட்டத்தில் இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரகாஷ், விவசாயிகளுக்கான உணவை குருத்வாராவில் இருந்து பெற்று வந்து தருகிறார். குருத்வாராவில் வட மாநிலங்களில் பிரபலமான சப்பாத்தி, சப்ஜி, பருப்பு (டால்) போன்ற உணவு வகைகள் தான் வழங்கப்படுகின்றன. "தமிழக விவசாயிகளின் உடலுக்கு அவை ஒத்துக் கொள்ளாததை அறிந்து அவர்களுக்காக சில வேளையில் சாதம் பரிமாறப்படுகிறது" என்கின்றனர் குருத்வாரா பிரபந்தக் குழு சமையல் கூடத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.