திருவண்ணாமலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது திருவண்ணாமலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த வேட்டலம் ஜமீன் வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை நிற மரகத லிங்கம் இருந்தது.
இது கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாத இரவில் கோவிலின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனுடன் சேர்ந்து அம்மனின் மற்ற நகைகளும் கொள்ளை போயின.இதையடுத்து வேட்டலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு மாற்றியது.
இதையடுத்து பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைத் தடுப்புப் பிரிவு அணியினர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஜமீன் பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மரகத லிங்கம் ஜமீன் வளாக குப்பைத் தொட்டியிலேயே கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.