மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் மோடி கலந்து கொண்ட இப்தார் விருந்து படத்தை போட்டு டிவிட்டரில் கிண்டலடித்ததால் அமித் ஷா'வின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
டிவீட் வெளியிட்ட சில மணிகளிலேயே அமைச்சர் அழைத்த அமித் ஷா இது தொடர்பாக அமைச்சரிடம் கேட்டதாகவும் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியதாகவும் டெல்லி வட்டாரம் பரபரத்துக் கிடக்கிறது.
சர்ச்சைக்குரிய டிவீட்டில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பீகார் முதல்வரும் பாஜக'வின் கூட்டாளியுமான நிதிஷ் குமார் மற்றும் பீகார் பாஜக முகமாக அறியப்படும் சுஷில் மோடியும் இடம் பெற்றிருந்தனர். இதைக் குறிப்பிட்டு, "எவ்வளவு அருமையான புகைப்படம். இதே போன்று நாம் ஒரு நவராத்திரி உணவு படைத்து இதே ஆரவாரத்துடன் பகிரலாம். நாம் ஏன் நமது முன்னோர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது போல், இதே போன்று பாசாங்கு செய்யக் கூடாது?" என இந்தியில் கிண்டலடித்திருந்தார்.
குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் அவரின் மகன் சிராக் பஸ்வான், எதிரணியில் உள்ள ஹிந்துஸ்தான் அவா மோர்ச்சா(மதச்சார்பற்றது) தலைவர் ஜித்தன் ராம் மச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு அவர் கட்சியைச் சேர்ந்தவரும், பீகாரின் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி பதிலடி கொடுத்துள்ளார். "நான் இந்து என்பதில் பெருமையடைகிறேன். இப்தார் மட்டுமல்ல, இது போன்ற அனைத்து ஆன்மீக நிகழ்வுகளில் பங்கெடுப்பது எனது வழக்கமே. இன்று நேற்றல்ல, கடந்த 25 ஆண்டுகளாக இப்தாாா் நோன்பில் கலந்து கொண்டு வருகிறேன். ஹோலி மிலன் விருந்துகளை என்றுமே நடத்தாதவர்கள் தான் கேள்வி கேட்கின்றனர்" என சுஷில் மோடி பதிலளித்துள்ளார்.
தன்னுடைய பேச்சுக்களாலேயே பிரபலமடைந்த கிரிராஜ் சிங் பீகாரின் பெகுசாராய் தொகுதியில் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிரபலமான கன்னையா குமாரை எதிர்த்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
"பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" எனும் கோஷத்தை அதிகமாக முன்வைத்து பாஜக'விற்கு அவப்பெயரை உண்டாக்குவதில் கிரிராஜ் சிங்கும் முண்ணனியில் உள்ளார்.
ஏற்கனவே அமைச்சரவையில் ஒரு இடம் தான் வழங்குவோம் என கூறியதால் கடுப்பான நிதிஷ்குமாருக்கு தற்போது கிரிராஜ் சிங்கின் பேச்சு மூலம் பாஜக'வுடனான விரிசல் அதிகமாகவே செய்யும். 
அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக கடந்த வாரம் பேட்டியளித்த நிதிஷ் குமார், பெயரளவில் ஒரு இடம் வழங்குவதை ஏற்க முடியாது. கூட்டணியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்றும், அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் அமைச்சரவையில் பெயரளவில் இடம் பெற விருப்பமில்லை என தெரிவித்து விட்டார். எனினும் பாஜக'வுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
ஆனால் இதன் மூலம் பிரிவு அதிகமாகியுள்ளது என ஊடகங்கள் தொடர்ந்து முன்வைக்கும் நிலையில் கிரிராஜ் சிங் போன்ற நபர்களால் உண்மையாகவே பிளவு ஏற்படும் சூழல் உண்டாகும் என்பதை உணர்ந்த அமித் ஷா உடனடியாக கிரிராஜ் சிங்கை அழைத்து இது போன்று பேசக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பீகாரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பீகார் அமைச்சரவையை விரிவாக்கிய நிதிஷ் குமார் தன்னுடைய கட்சியில் புதிதாக 8 பேருக்கும் பாஜக'வில் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
பிளவுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமாக இரு கட்சிகளும் நெருக்கமாகவே இணைந்து செயல்படுகின்றன.


Find out more: