பாகிஸ்தான் இராணுவம் யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த நிதியாண்டில் தன்னுடைய இராணுவ செலவினங்களுக்கான நிதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. மிகக் கடுமையான நிதித் தட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் அரசாங்கம் சிக்கன நடவடிக்கையை அரசுத் துறைகளில் அமல்படுத்தியதைத் தொடர்ந்து தனிக்காட்டு இராஜாவாக செயல்படும் பாகிஸ்தான் இராணுவமும் இந்த செலவினக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது ஆச்சரியப்படத் தக்க விசயமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் இராணுவத்தின் மக்கள் தொடர்பு இயக்குநரான மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு வரும் நிதியாண்டில் பாதுகாப்புக்கான நிதியைக் குறைத்துக் கொள்ள இருக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டுக்கான நிதிக் குறைப்பு என்பது எந்த வகையிலும் நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைத்து மேற்கொள்ளப்படாது. நாடு எதிர்நோக்கும் பாதுகாப்பு சவால்களை சந்திக்க எந்நேரமும் இராணுவம் தயாராக உள்ளது. நிதிக் குறைப்பால் ஏற்படும் இடர்பாடுகளை முப்படைகளும் இணைந்து சமாளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் ஏழ்மையான நிதிநிலையை கருத்தில் கொண்டு இராணுவம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது என பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பாவாத் சௌத்ரி, " இது எளிமையான முடிவு அல்ல. நாட்டின் இராணுவம் மற்றும் மக்களிடையே உள்ள வலுவான ஒற்றுமை தான் நாட்டின் நிதிப் பிரச்சினைகளை தீர்க்க உதவியாக இருக்கும்" எனக் கூறினார்.
மே 28'ம் தேதி பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் ஆவான் பாகிஸ்தான் வருடாந்திர வரவு செலவுத் திட்டம் ஜூன் 11 அன்று தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் அரசுத் தரப்பிலிருந்து அரசு மற்றும் இராணுவ அமைப்புகள் 2019-20 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு மேற்கொள்ளப் போகும் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018'ம் ஆண்டு இராணுவத்துக்கு அதிகமாக செலவிடும் நாடுகளின் பட்டியலில் 11.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு செலவிட்டு பாகிஸ்தான் உலகின் 20'வது பெரிய நாடாக உள்ளதாக ஸ்டாக்ஹோமிலிருந்து செயல்படும் பன்னாட்டு சமாதான ஆய்வு நிறுவனம் கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2004'ம் ஆண்டு முதல் கணக்கிடுகையில் 2018'ம் ஆண்டு தான் அதிகபட்சமாக ஜிடிபி'யில் 4 சதவீதம் அளவிற்கு இராணுவத்திற்கு என பாகிஸ்தான் அரசு ஒதுக்கியது எனக் ஸ்வீடனைச் சேர்ந்த இராணுவ ஆய்வு நிறுவனம் கூறியிருந்தது.
உலகில் இராணுவத்துக்காக அதிக நிதியைச் செலவிடும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இராணுவத்திற்காக 649 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளது. எனினும் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் இராணுவ செலவினங்களை 17% குறைத்துள்ளது அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.