திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் நேற்று மர்ம நபர்களால் கூச் பிகார் எனும் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் 24 பர்கானா பகுதியில் மற்றொருவர் கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த பகுதிகளில் திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
கல்கத்தாவின் 24 பர்கானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிர்மல் குண்டு எனும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றுள்ளனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு பின்னால் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆட்களே உள்ளனர் என குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பர்கானாவில் நடந்த கொலையில் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை சுமன் குண்டு மற்றும் சுஜய் தாஸ் என இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பாரதீய ஜனதா கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். நிர்மல் குண்டுவின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க இன்று மம்தா பானர்ஜி நிர்மல் குண்டுவின் இல்லத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு புறம் கூச் பிகார் பகுதியில் அஜர் அலி எனும் திரிணாமுல் கட்சி உறுப்பினர் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் குண்டர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதிலும் பாஜக தொடர்பு இருப்பதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். இது அந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மம்தா பானர்ஜி நிர்மல் குண்டுவின் இல்லத்திற்கு வர உள்ள நிலையில் இன்றைய தினம் அப்பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால் கறுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாஜக சார்பாக நைகதியில் நடைபெற உள்ள வெற்றி விழாக் கூட்டத்தில் பாராளுமனரற உறுப்பினரும், மேற்கு வங்க கட்சித் தலைவருமான திலீப் கோஷ் கலந்து கொள்ளவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மல் குண்டுவை கொலை செய்த இருவரும் நேற்று பாரக்பூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பாஜக'வைச் சேர்ந்தவர்கள் தான் என மேற்குவங்க காவல்துறை தெரிவித்துள்ளது.