ஓமனிலிருந்து துபாய் செல்லும் பேருந்து ஒன்று நேற்று துபாய் செல்லும் போது விபத்து ஏற்பட்டு 17 பேர் உயிரழந்துள்ளனர் .மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், 31 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓமனிலிருந்து துபாய் வந்த பேருந்து நேற்று மாலை ரஷதியா வெளியில் சாலைவிதிகளை மீறி கடக்கும் போது விபத்து ஏற்பட்டது என துபாய் காவல்துறை கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்து நொறுங்கி அப்பளமாகிப் போனது எனக் கூறிய காவல்துறை, சிறு பிழைகள், மற்றும் விதி மீறல் கூட மிகப் பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த விபத்து உணர்த்துவதாக கூறினர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ரஷீத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறிய அளவில் காயமடைந்த நான்கு இந்தியர்கள் சிகிச்சைக்கு பிறகு அனுப்பப்பட்டனர். மற்ற சிலருக்கு சிகிச்சை தொடர்ந்து நடக்கிறது.
உள்ளூர் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட இந்திய தூதரகம் இறந்த நபர்களில் 8 பேர் இந்தியர்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜானி மற்றும் திலக்ராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர் விபத்தில் மரணமடைந்த இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுடன் இந்தியத். தூதரகம் தொடர்பில் உள்ளதாக தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஓமன் அரசுக்கு சொந்தமான வசாலத் எனும் பேருந்து மஸ்கட்டிலிருந்து துபாய் நோக்கி சென்ற போது நேற்று மாலை 6 மணியளவில் இந்த கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த பேருந்தின் சேவையை நிறுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியர்களுக்கு உதவ +971-504565441 மற்றும் +971-565463903 எனும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.