இந்தியா ஒரு மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது என்பது பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து உணர முடிகிறது.. அடுத்த 21 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளதுடன், 21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேவரமாட்டோம் என சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா பேரழிவை வரவேற்பதாக அர்த்தம் என்று பிரதமர் சொல்லி உள்ளதன் அவசர, அவசியத்தை மக்கள் கவனித்து பார்க்க வேண்டும்! கொரோனா வைரஸ் இந்த அளவுக்கு இந்தியாவை அசைத்து பார்க்கும் என்று நாம் ஆரம்பத்தில் நினைக்கவில்லை.. விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கையும் போதும், கொரோனாவை விரட்டலாம் என்றுதான் யூகித்தோம். ஆனால் பலி எண்ணிக்கை நமக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. அடுத்தடுத்து இந்த தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை கலக்கத்தை தந்து வருகிறது.
அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்தாலும் பெரிய அளவுக்கு முன்னேற்றம் இல்லை.. பிரதமர் அன்று சுய ஊரடங்கு என்று சொன்னபோதுகூட நாடு இவ்வளவு சீரியஸ் கட்டத்தில் இல்லை.. தெரிந்திருந்தால் நிச்சயம் அன்றைய தினமே நாட்டை லாக் டவுன் செய்திருப்பார். ஆனால் அப்போதிருந்தே ஒருசிலர் லாக்டவுன் என்றே வலியுறுத்தி வந்தனர். நம்மிடம் போதுமான மருத்துவ கட்டுமான வசதிகள் இல்லாதால் லாக் டவுன் என்பது அவசியம் என்பதை வேண்டுகோளாக வலியுறுத்தியே வந்தனர். இந்த முடிவைதான் இப்போதுமோடி அறிவித்துள்ளார்.. லேட்டான அறிவிப்புதான் என்றாலும் இதை நிச்சயம் வரவேற்று மதிப்பளிக்க வேண்டும்.
மோடி 2வது முறையாக உரையாற்ற போகிறார் என்றதுமே பகீர் என்று ஆகிவிட்டது.. "அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் லாக் டவுனுக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்குக்கு அனுமதியில்லை.. இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒத்துழையுங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது" என்றார். இதில் மோடி பேசியபோது குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயம் சோஷியல் மீடியாவில் இதுகுறித்து வலியுறுத்துமாறு சொல்லியதுதான்.. சமூக பொதுவெளியில் தள்ளி இருத்தல் மற்றும் வீட்டிற்குள்ளேயே இருப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்துமாறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். "21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேவரமாட்டோம் அப்படி வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா பேரழிவை வரவேற்பதாக அர்த்தம்" என்கிறார் மோடி. இதுதான் மக்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டியது.. இதில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், கொரோனாவின் தாக்கத்தோடு, கொரோனா தொடர்பான வதந்திகளும் தினம் தினம் புதிதாக வந்துகொண்டிருக்கின்றன. கொரோனா மீது இருக்கும் அச்சம் காரணமாக, அது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்... ஆனால், இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பல வெப்சைட்கள் இஷ்டத்துக்கும் தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர். இனியும் இதுபோன்ற வதந்தி, தவறான தகவல்களை சோஷியல் மீடியாவில் பரவ விடாமல் தடுக்க வேண்டும். அச்சுறுத்தல் இல்லாமல் விழிப்புணர்வு குறித்த செய்திகளை அதிகம் பரப்ப வேண்டும்.. அதேபோல எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் மீடியாக்கள் தங்கள் கடமைகளை செய்து வரவே செய்கின்றனர்.. இனியும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல எதுஎதுக்கோ மீம்ஸ்களை போடும் நெட்டிசன்கள், பிரதமரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, 21 நாட்களும் செயல்பட வேண்டும்!