
திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவருமே காதல் மயக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்குமே பொருந்தும். நீங்கள் தவறான நபர்களை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமானதுதான். அதற்காக உங்கள் துணையை விட்டு நீங்கள் விலக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். ஆனால் நீங்கள் தவறான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்று உறுதியாக தெரிய வந்தால் உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியேறுவது நல்லது. நீங்கள் தவறான நபரை திருமணம் செய்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் உறவில் நடக்கும் சில சம்பவங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும், ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. சோகமாக இருப்பதோ அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பதோ அசாதாரணமானதல்ல, ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் உங்கள் துணையால் உங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை என்றால் அது நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம்தான். ஒவ்வொரு நாளையும் கடத்துவது என்பதே உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். அப்படியிருந்தால் உங்கள் பிரச்சினைக்கான காரணம் உங்களின் வாழ்க்கைத்துணைதான்.
நீங்களும் உங்கள் துணையும் எல்லாவற்றையும் பற்றி வாதிடுகிறீர்களா? இது ஒரு வழக்கமான செயலாகிவிட்டதா? சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஒரு உறவின் மிகவும் பொதுவான அம்சங்களாக இருந்தாலும், அது தினமும் நடந்தால் அது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு காரணமாகும். நாளடைவில் இது மிகவும் மோசமானதாக மாறும், அது நடக்கும்போது நீங்களே உணர்வீர்கள். உங்கள் திருமணத்தில் உங்களுக்கு அதிகமான மோதல்கள் இருந்தால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனப்பொருத்தம் இல்லை என்று அர்த்தம். நீங்கள் சண்டைகளை தவிர்க்க நினைத்தாலும் சண்டை வந்தால் உங்கள் துணை மீதுதான் தவறு.