தஞ்சாவூர்:
தஞ்சாவூரின் பெருமைகள் பட்டியல் போட்டாலும் காணாது. அவ்வளவு நீளமானவை. இதில் குழந்தைகளை கவரும் அம்சம் என்றால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்தான். எத்தனை அழகு எத்தனை அழகு. 


தலையாட்டி பொம்மை:


இதில் இரண்டு வகை உள்ளது. தலையாட்டி பொம்மை செட்டியார் உருவம். அவரது மனைவி உருவம். நாட்டிய பெண் உருவம். ராஜா உருவம் என்று இருக்கும். இந்த பொம்மைகளை தட்டினால் தலை, உடல் என்று ஆடும். நளினமாக கலை நுட்பத்துடன் பாரம்பரியத்தை கொண்ட இந்த பொம்மைகளுக்கு இருக்கும் சிறப்பு நம்மவர்களுக்கு கிடைத்த பெரிய பெருமை.


இந்த பொம்மைகளை களிமண் கொண்டு செய்கின்றனர். உருவங்களுக்கு பேப்பர் கூழ் பயன்படுத்துக்கின்றனர். வர்ணம் பூசப்படுவதும் ரசாயனம் அற்ற இயற்கை வர்ணங்கள்தான். இந்த பொம்மைகள் பல வெளிநாடுகளிலும் பிரசித்தம். இன்றும் இவை பல வெளிநாடுகளுக்கு பறக்கின்றன.


நாட்டியமாடு மங்கை உருவம் கண்ணை கவரும். அப்படி செட்டியாரும், அவரது மனைவியும் அமர்ந்தது போல் உள்ள பொம்மை சிரிப்பை வரவழைக்கும். இப்படி நுண்ணிய வேலைப்பாடுகளால் பெருமை பெற்றிருந்த இந்த பொம்மைகள் விற்பனை அப்போது அமோகம். இப்போதோ அய்யோ... பரிதாபம்தான்.


அழும் குழந்தைக்கு முன்பு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையையும்.. எந்த பக்கம் சாய்த்தாலும் நிமிரும் மண் பொம்மையையும் வைத்தால் அவ்வளவுதான் அதன் அழுகை காணாமல் ஓடி போய் இருக்கும். கண்ணில் இருந்து வந்த கண்ணீர் மாயமாய் மறைந்து அந்த பொம்மையுடன் விளையாட ஆரம்பித்து விடும். அந்த காலம் தற்போது திரும்புமா? 



எலக்ட்ரானிக் இடம் பிடிப்பு:




காலங்கள் மாற...மாற குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் தஞ்சையின் பாரம்பரியமிக்க இந்த சுடு மண் பொம்மைகள் காணாமல் போக ஆரம்பித்தன. எலக்ட்ரானிக் விளையாட்டு பொருட்கள் அதிகளவில் இடம் பிடித்தன. ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்க நாம் ஆரம்பித்தோம். இந்த பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளுக்கு ஓடி விளையாட வேண்டும் என்ற எண்ணமே மறந்து போனது. 


கம்ப்யூட்டர் கேம்ஸ்:



இப்படியே வளர்ச்சி... வளர்ச்சி என்று எலக்ட்ரானிக் உன்னத வளர்ச்சி அடைய பெருமை மிகுந்த பொருட்கள் கண்காட்சிக்கு போகும் நிலைதான் ஏற்பட்டது. அதிலும் கம்ப்யூட்டர் கேம்ஸ் பல் முளைக்காத குழந்தைகளின் மத்தியிலும் இடம் பிடித்ததுதான் வேதனை.


தஞ்சாவூர் பொம்மைகள்:



அன்று திரும்பிய பக்கமெல்லாம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் வாங்க மக்கள் நின்றிருந்த காலம் போய் தற்போது தள்ளுவண்டிகளில் வைத்து யாராவது வந்து வாங்குவார்களா என்று வியாபாரிகள் காத்திருக்கின்றனர். பழம் பெருமை வாய்ந்த இந்த சுடுமண் பொம்மைகளை தஞ்சைக்கு அருகில் உள்ள மாரியம்மன் கோயில் பகுதியில் உற்பத்தி செய்கின்றனர். இந்த தொழில் பெரிய அளவு வருமானம் இல்லை என்றாலும் தங்களின் வம்சாவளியான தொழிலை கைவிட மனதின்றி குறைந்த வருவாயில் காலம் தள்ளி வருகின்றனர் இந்த மண் பொம்மைகள் தயாரிப்பவர்கள்.


எந்த பக்கமும் சாயாத ராஜா:



இந்த மண்பொம்மைகளுக்கு அழகே அதன் நருவிசான கலைதான். அழகான வர்ணங்கள் பூசப்பட்டு நகைகள் அணிவிக்கப்பட்டது போன்ற கலையம்சம் கொண்ட இந்த பொம்மைகளின் அடிப்புறம் மட்டும் உருண்டையாக கனமாக இருக்கும். பொம்மைகளுக்கு இதுதான் அஸ்திவாரம் என்று சொல்லலாம். இந்த பொம்மைகளை கீழே சாய்த்து வைத்தால் ஸ்பிரிங் போல சட்டென்று நிமிர்ந்து ஆட தொடங்கும். சுற்றுப்புறத்தை பாதிக்காத குழந்தைகளை பாதிக்காத வகையில் இன்றும் இந்த பொம்மைகள் செய்யப்படுகின்றன.


ஜெராக்ஸ் காப்பி:



தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றாலே அது சுடுமண்ணால் செய்யப்பட்டதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் இதன் அழகு குன்றாது. ஆனால் பிளாஸ்டிக்கில் குறைந்த விலைக்கு இந்த பொம்மைகள் வருகின்றன. அடியில் உள்ள பிளாஸ்டிக் வட்டத்தில் களிமண்ணை மட்டும் வைத்துவிடுவர். இதனால் இதுவும் எந்தபக்கம் சாய்த்தாலும் நிமிர்ந்து நின்று ஆட ஆரம்பித்து விடும். இவை மதுரையிலிருந்து வருகின்றன.


விற்பனை இடங்கள்:



தஞ்சையின் பாரம்பரியத்தை காக்கும் பொருட்டு இந்த பொம்மைகளை கலை நயம் மாறாமல் விற்பனை செய்யும் இடங்கள் உள்ளன. பல வெளிநாட்டினர் இதை வாங்கி செல்கின்றனர். பெரிய கோயில் அருகில் தள்ளுவண்டியில் போட்டு சில சில்லரை வியாபாரிகளும் விற்கின்றனர். பொம்மையின் அளவிற்கு ஏற்ப விற்பனை விலை சொல்லப்படுகிறது.


மறந்தாலும்... மறைக்க முடியாத பெருமை!


இந்த பொம்மைகளை வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு வரும் சுற்றுலாபயணிகள் வாங்கி செல்கின்றனர். இருப்பினும் விற்பனை என்பது எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் குறைவுதான் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இந்த பொம்மைகள் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத தஞ்சையின் பெருமையை கூறுபவை என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.



மகாராஜா, மகாராணி, நடனப்பெண், செட்டியார், அவரது மனைவி என பல உருவங்களில் செய்யப்படும் இந்த பொம்மைகள் தற்போது ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரியத்தை காக்கும் இந்த பொம்மைகளுக்கு நாமும் ஆதரவு கொடுப்போம். எத்தனையோ உறவினர்களின் குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் நாம் பல்வேறு ரசாயன கலப்பு பொம்மைகளை கொடுப்பதை காட்டிலும் நமது பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் இந்த பொம்மைகளை பரிசளிக்கலாமே. பிறந்த நாள், கல்யாண நாள், கிரகபிரவேசம் உட்பட எத்தனையோ விழாக்கள். அதில் இந்த பெருமை மிகு பொம்மைகளும் இடம் பிடிக்கட்டுமே.


Find out more: