திருச்சி:
ஏங்க... உங்களை இட்லிப்பொடி வாங்கிக்கிட்டு வர சொன்னேனே! என்னாச்சு... அடடா... "மறந்தே" போயிட்டேன்மா... இது போன்று பல டயலாக்குகள் தினம், தினம் கேட்டு இருப்போம். ஏன் நாமே சொல்லியிருப்போம். உண்மையிலேயே மறப்பதும் உண்டு... அந்த நேரத்தில் தப்பிக்க மறந்தே போயிடுச்சே என்று சொல்வதும் உண்டு.
மறதி மன்னாருகளால் நிறைந்த இடம்தான் இது. சாதாரண தண்ணீர் டம்பளரை எடுத்து வைப்பதில் இருந்து கருவேப்பிலை, கொத்தமல்லி, காய்கறிகள், மளிகை பொருட்கள், சாவி, பேனா என்று எடுத்து வைப்பதில் ஏற்படும் மறதி...மறதி... மன்னாருக்கள் நாம். ஆனால் இந்த மறதி என்பது வியாதியாகவே மாறி போனவர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு அதிக மறதி ஏற்படுகிறது. நன்றாக படிக்கிறான்... ஆனால் தேர்வில் அனைத்தையும் மறந்து விடுகிறான் என்று புலம்பும் பெற்றோர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம் உள்ளது. இதை களைய உங்களுக்காக சிறு... சிறு... யோசனைகள்...
குழந்தை பருவம் என்பது பசுமரத்தாணி போல... அதாவது இளமையான மரத்தில் ஆணியை அடிப்பது கடினமான ஒன்றா... இல்லியே... எளிதாக அடித்து விடலாம் அல்லவா. அதுபோல்தான் மறதி உடைய குழந்தைகளை திட்டுவதோ... அடிப்பதோ கூடாது. அவர்களை அவர்களின் செயல்பாட்டாலேயே திருத்தி விடலாம். அலட்சிய மனப்பான்மை கொண்டவர்கள் கூட மறதியால் அவதிப்படும் போது சொன்னதை எளிதில் புரிந்து கொள்ளும் குழந்தைகளை ஆட்டுவிக்கும் மறதி நோயிலிருந்து மிக எளிதாக... மாற்ற முடியும் என்று ஆய்வுகளும் சொல்கின்றன.
முதலில் மறதி என்பதையே மறந்து விட செய்ய வேண்டும். குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரித்தாலே... அல்லது தூண்டிவிட்டாலே போதும் அவர்கள் நம்மையே தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள். மறதி என்பது சாபம் போல் தோன்றலாம். ஆனால் அது பெரிய விஷயமே கிடையாது என்பதுதான் உண்மை. குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க செய்ய சில டிப்ஸ்களை பார்ப்போமா!
படிப்பு என்பதும், வாசிப்பு என்பது ஒரு பெரிய கலை... அதை குழந்தைகளுக்கு சிறுவயது முதலே கற்றுத்தர வேண்டியது பெற்றோராகிய உங்களது முதல் கடமை. வாசிப்பு திறன் இருந்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பிறகு எப்படி மறதி என்பது ஏற்படும்.
படிக்கிறது பெரிய விஷயமா என்று குழந்தைகள் எளிதாக சொல்லிவிடுவார்கள். அட படித்ததை எழுதி பாருப்பா... அப்ப தெரியும் நீ எதை எதை விட்டாய் என்று... சொல்லுங்கள். ஏன் நீங்களே ஒரு "பாராவை" படித்துவிட்டு அதை எழுதி பாருங்கள்... அதில் சில தவறுகள் செய்திருப்பீர்கள். அதனால் படிப்பது மட்டுமின்றி எழுதியும் பார்க்க வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் ஆழ பதிய செய்யுங்கள். இப்படி எழுதி பார்க்கும் செயலால் எத்தனை மாதங்கள் ஆனாலும் படித்தது நினைவில் இருக்கும். நினைவில் இருந்தால் மறதி என்பது எப்படி வரும்... ஹோம் ஒர்க் என்பதை ஏதோ கடமைக்கு செய்வதாக குழந்தைகள் நினைக்க கூடாது. அதை நீங்களும் ஊக்குவிக்க கூடாது. புரிந்து படித்தலும், படித்ததை எழுதி பார்த்தலும் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
புரியலை... குழந்தை கூறுகிறதா... அப்போ அதற்கு என்ன செய்ய வேண்டும். குழந்தைக்கு புரியும் வகையில் புரிந்து கொண்டதா என்பதை முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்ட பின்னரே உங்கள் விளக்கத்தை முடிக்க வேண்டும். அது எவ்வளவு நேரமாக இருந்தாலும் எளிமையாக குழந்தையின் மனதில் புரிய வைக்க வேண்டும். இதனால் புரியாததை குழந்தைகள் மறந்து விட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் அதை குழந்தையின் மனதில் ஏற்ற செய்ய வேண்டும்.
குழந்தைகளின் நிம்மதியான உறக்கம் அவற்றின் ஞாபகத்திறனை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மறதி என்ற சொல்லையே மறக்க செய்யும். குழந்தைகள் எட்டு மணிநேரம் தூங்க வேண்டியது அவசியமான ஒன்று. அதை பெற்றோராகிய நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுப்பி குழந்தைகளை படிக்கச் செய்வது வாயிலாக மறதியை ஒதுங்கி ஓட செய்யலாம். அதிகாலையில் மனசு தெளிந்த நீரோடை போல் இருக்கும். அதனால் அப்போது மூளையின் செயல்திறன் அதிகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். எனவே அந்த நேரத்தில் படிப்பதோ... செய்வதோ என்றும் மறக்காது.
தூங்க போகும் முன் அன்று படித்தவற்றை... செய்தவற்றை குழந்தைகளோடு குழந்தையாக மாறி கேட்கும் போது அவர்கள் எதையும் மறக்க மாட்டார்கள்.
இதை பின்பற்றி பாருங்கள்... உங்கள் மகனோ... மகளோதான்... பள்ளியில் முன்னணியில் இருப்பார்கள். செய்வோம்.. குழந்தைகளை முன்னேற்றுவாம்... அப்புறம் என்ன உங்கள் குழந்தைகளை கண்டு ஆசிரியர்களே தெறித்து ஓடுவார்கள். அச்சத்தால் கூட குழந்தைகள் படிப்பதை மறந்து மறதியை துணைக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இது சரியான வழிகாட்டுதலால் சீரமைக்கலாம். குழந்தைகளின் மறதி என்பது வியாதி அல்ல... அது புல்லில் அமர்ந்துள்ள பனித்துளி போன்று... சூரியனை கண்டவுடன் மாயமாய் மறைந்துவிடும். அதுபோல உங்களின் சரியாக வழிகாட்டுதல் குழந்தைகளை மாற்றி விடும்.